புல்லவையுள் பொச்சாந்தும் ... குறள் 719
22/11/2021 (272)
பயனில சொல்லாமை அதிகாரத்தின் கடைசிக் குறள் (200) முடிவுரையாக அமைந்துள்ளது. நாம் ஏற்கனவே பார்த்த குறள்தான், மீள்பார்வைக்காக:
சொல்லில் பயனுள்ள சொல்லை மட்டுமே சொல்ல வேண்டும். பயனில் சொற்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக இடித்து கூறுகிறார். அந்த குறள் தான் 200 வது குறள்.
“சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க சொல்லின் பயனிலாச் சொல்” --- குறள் 200; அதிகாரம் – பயனில சொல்லாமை
நேற்று ‘பொச்சாந்து’ என்ற ஒரு சொல்லைப் பார்த்தோம். பொச்சாந்து என்றால் ‘மறந்து’ என்று பொருள்.
பயன் இல்லாததை பொச்சாந்தும் சொல்லார்ன்னு சொன்ன நம் பேராசான், பயனுடையச் சொற்களாக இருந்தாலும் சொல்லாதீங்கன்னு ஒரு குறளில் சொல்கிறார். அது எப்போது?
மழைக் காலம், ஒரு மரத்தடியிலே ஒரு குரங்கு குளிருக்கு ஒதுங்குச்சாம். அந்த மரத்தில் ஒரு தூக்கணாங்குருவி (Baya Weaver) கூடு கட்டி நிம்மதியா இருந்துதாம். அது அந்த குரங்கு சிரமப் படுவதைப் பார்த்து சொல்லுச்சாம் “நண்பா, நீ என்னைவிட வலுவானவன், திறமைசாலி. உனக்குன்னு ஒரு வீட்டைக் கட்டிக்க கூடாதா? என்னைப்பாரு நான் எனக்கு ஏற்றார் போல் ஒரு கூட்டை வைத்திருக்கிறேன்”ன்னு குரங்கிற்கு ஒரு ‘பயனுள்ளதை’ச் சொல்லுச்சாம்.
வந்துதே பாருங்க கோவம் குரங்குக்கு. உடனே அந்தக் குரங்கு மரத்துமேல ஏறி குருவியின் கூட்டை பிய்த்து விட்டதாம்.
“வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறிசொலத் தாண்டிப் பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக் குரைத்திடில் இடர(து) ஆகுமே” --- விவேக சிந்தாமணி 9
நல்லார்கள் கூடியிருக்கும் அவையில் பயனுள்ளதை நன்கு அவர்கள் மனம் விரும்புமாறு சொல்பவர்கள், புல்லர்கள் அவையில் வாய் மூடி இருந்துடனுமாம், மறந்தும் எதையும் சொல்லக் கூடாதாம்.
“புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்கு செலச் சொல்லு வார்.” --- குறள் 719; அதிகாரம் – அவை அறிதல்
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
