top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

புல்லவையுள் பொச்சாந்தும் ... 719, 393, 199

30/05/2023 (817)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

கல்வி என்னும் அதிகாரத்தில் மூன்றாவது பாடலாக, நம் பேராசான் சொல்லும் கருத்து: கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர். இந்தக் குறளை நாம் முன்பே பார்த்துள்ளோம். காண்க 07/11/2021 (257), 03/02/2023 (701). மீள்பார்வைக்காக:

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்.” --- குறள் 393; அதிகாரம் – கல்வி


கண்ணுடையர் என்பவர் கற்றோர் = கண் இருக்கு என்று சொன்னாலே அவர்கள் கற்று அறிந்தவர்கள்தான்; முகத்து இரண்டு புண்ணுடையர் கல்லாதவர் = கற்று அறியாதவர்களுக்கு புறக்கண்கள் என்ற இரண்டு இருந்தாலும் அது ஒரு முரண். அதாவது ஊனம்.


மூவகை அவைகளாவன மிக்கார், ஒத்தார், தாழ்ந்தார் அவைகள் என்று நம் பேராசான் பகுத்துச் சொல்கிறார்.


நல்ல பல அவைகளில், உயர்ந்த பல கருத்துகளைச் சொல்லத் தெரிந்தவர்களும் வாயைத் திறக்கக் கூடாதாம்! எங்கே என்றால், அற்பர்களின் அவையில் என்கிறார்.

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்

நன்கு செலச்சொல்லு வார்.” --- குறள் 719; அதிகாரம் – அவையறிதல்


நல்லவையுள் நன்கு செலச் சொல்லுவார் = அறிவில் உயர்ந்தவர்கள் அவைகளில் நல்ல பல கருத்துகளை எடுத்து வைக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருந்தாலும்; பொச்சாந்தும் = மறந்தும்; புல்லவையுள் சொல்லற்க = அற்பர்களின் அவைகளில் எந்தக் கருத்துகளையும் சொல்லாமல் இருக்க.


அறிவில் உயர்ந்தவர்கள் அவைகளில் நல்ல பல கருத்துகளை எடுத்து வைக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருந்தாலும், மறந்தும், அற்பர்களின் அவைகளில் எந்தக் கருத்துகளையும் சொல்லாமல் இருக்க.


சிலர் அப்படித்தான். என்ன சொன்னாலும், எதைக் குறித்துச் சொன்னாலும், அது அவர்களின் அறியாமையைக் குறித்துதான் சொல்கிறோம் என்று எடுத்துக் கொள்வார்கள். மேலும், நாம் அவர்களை கேலி பேசுகிறோம் என்று எடுத்துக் கொண்டு, நம்மை வார்த்தைகளால், செயல்களால் தாக்கத் தொடங்கிவிடுவார்கள்.


அங்கே, வாயை மூடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

நமக்குத்தான் ஓட்டை வாயாக இருக்கே!


வாயை முடுவது என்பது நம் வழக்கத்தில் இல்லை என்றால் வாங்கிக் கட்டிக் கொள்ளவது வாடிக்கையாகப் போகிறது.


நம்மாளு: ஐயா ஒரு சந்தேகம். பொச்சாந்து, பொச்சாப்பு என்ற சொல்கள் தொடர்புடையனவா? மறதி என்று பொருள்படும்படி பயன்படுத்தலாமா?


ஆசிரியர்: நம் பேராசான் “பொச்சாந்தும்” என்னும் சொல்லை இரு குறள்களில் பயன்படுத்தியுள்ளார். மற்றொரு குறளையும் நாம் ஏற்கெனவே பார்த்துள்ளோம். காண்க 21/11/2021 (271). மீள்பார்வைக்காக:


பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த

மாசறு காட்சி யவர்.”--- குறள் 199; அதிகாரம் – பயனில சொல்லாமை


பொச்சாந்தும் = மறந்தும், தவறியும்கூட; மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர் = மயக்கமில்லாத தெளிவுடன் வரப்போவதை காண்பவர்கள்; பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் =பொருள் இல்லாத சொற்களை மறந்தும் சொல்லமாட்டார்கள்.


மயக்கமில்லாத தெளிவுடன் வரப்போவதை காண்பவர்கள், பொருள் இல்லாத சொற்களை தவறியும்கூட சொல்லமாட்டார்கள்.


மேற்கண்ட இரு குறள்களிலும் பொச்சாந்தும் என்பதற்கு “மறந்தும்” அல்லது தவறியும்கூட” என்று பொருள்படும்படி பயன்படுத்தியுள்ளார். அதாவது, நமது அறிவின் இறுமாப்பில் வாய் தவறலாம். அது அறவே கூடாது என்கிறார்.


பொச்சாப்பு, பொச்சாந்து என்பன சாதரண மறதி என்னும் பொருள்படும்படி நம் பேராசான் பயன்படுத்தவில்லை. பொச்சாப்பு குறித்து நாம் ஏற்கெனவே பல முறை சிந்தித்துள்ளோம். காண்க 12/11/2021 (262), 23/11/2021 (273), 25/11/2021 (275), 26/11/2021 (276), 27/11/2021 (277). இது நிற்க.


புல்லவையுள் பேசுவதால் நன்மை ஒன்றும் நிகழப் போவதில்லை. அது மட்டுமல்ல, நம்மைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், அற்பர்கள் நம்மைத் தாக்குவதற்கும் ஏதுவாகும்.


நூற்றுக்கணக்கில், ஆயிரக் கணக்கில்தான் “அவை” இருக்கும் என்பதில்லை. ஒருவர் இருப்பினும் அதுவும் அவையே!


அவையறியாமல் பேசுவது என்பது எந்தக் காலத்திலும் இருக்கும் ஒரு பிரச்சனை போல! அதனால்தான், நம் பேராசான் ‘வாயை மறந்தும் திறக்காதே’ என்று எடுத்துச் சொல்கிறார். மனதில் வைப்போமா?


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


bottom of page