27/02/2023 (725)
மடியை மடியா கொண்டு ஒழுகல் என்றார் குறள் 602ல். அதாவது, நெருப்பை நெருப்பாக கருத வேண்டும். விலக்க வேண்டியதை விலக்கி வைக்க வேண்டும்.
விதித்தன செய்தல் விலக்கியன ஒழித்தல் அறம்.
தலையில் ஒருவனுக்கு அரிப்பு ஏற்பட்டதாம். அப்போது, அவன் கையில் கொள்ளிக்கட்டை இருந்ததாம். அரிப்பினைச் சொறிந்து கொள்ள குச்சி போல ஏதாவது இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தானாம்.
குச்சினைத் தேடிப்போக அவனுக்கு சோம்பேறித்தனமாக இருந்ததாம். ஏன் நாம் அங்கே இங்கே போக வேண்டும். நம்மிடம்தான் கொள்ளிக்கட்டை இருக்கே என்று அதைக் கொண்டு தலையைத் சொறிந்து கொண்டானாம்!
கொள்ளிக் கட்டையைக் கொண்டு தலையைச் சொறிந்து கொள்வார்களா?
நெருப்பை மடியில் கட்டிக் கொள்வார்களா?
அப்படி செய்தால் அவனை என்னவென்று அழைக்கலாம்? முட்டாள் என்று அழைப்பதில் தவறில்லை அல்லவா?
மடியை நெஞ்சத்து மடியில் வைத்துக் கொண்டவன் பேதை என்கிறார். அதன் காரணமாக அந்தப் பேதையின் கண்முன்னே அவனின் குடி அழியுமாம். அதுவும் எப்படி?
அவன் அழிவது நிச்சயம். ஆனால், அதற்குள் அவனின் குடி முந்திக் கொண்டு அழியுமாம்.
“மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.” --- குறள் 603; அதிகாரம் – மடியின்மை
மடி மடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடி = விலக்க வேண்டிய மடியைத் தன் நெஞ்சத்து மடியில் வைத்து தாலாட்டும் பேதை பிறந்த குடி;
தன்னினும் முந்து மடியும் = அவனையும் முந்திக் கொண்டு அழியும்.
விலக்க வேண்டிய மடியை தன் நெஞ்சத்து மடியில் வைத்து தாலாட்டும் பேதை பிறந்த குடி, அவனையும் முந்திக் கொண்டு அழியும்.
நாம் சோம்பி இருப்பதால் நமக்கு மட்டும் அழிவு இல்லை; நம் குடிக்கும் சேர்த்தே அழிவு.
குடி அழியத் தொடங்கினால் என்ன ஆகும்? என்பதைச் சொல்லப் போகிறார்.
நாளை தொடரலாம் என்றார் என் ஆசிரியர்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments