மடியிலா மன்னவன் 2 ... 610, 609
Updated: Mar 13
12/03/2023 (738)
“விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு கம்பன்” என்று பாராட்டுகிறார் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர். கம்ப பெருமானின் காலம் 12ஆம் நூற்றாண்டின் இறுதி என்கிறார்கள்.
கம்பபெருமான் இறை ஏற்பாளர் என்பது தெளிவு.
புலவர் குழந்தை (1906 – 1972) அவர்கள் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்து மறைந்த பெரும்புலவர். இவர் கடவுள் மறுப்பாளர். கம்பராமாயணத்திற்கு எதிராக ஒரு காப்பியம் சமைக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் 1948 ல் இவரால் இயற்றப்பட்டதுதான் “இராவண காப்பியம்”. இது 3100 பாடல்கள் கொண்டது.
இவரை “அறிவில் முதிர்ச்சி, உணர்வில் முதிர்ச்சி, புலமையில் முதிர்ச்சி, பாக்களைப் புனைவதில் முதிர்ச்சி – ஆனால், பெயர் மட்டும் குழந்தை!” என்று பாராட்டுகிறார்கள்.
புலவர் குழந்தை அவர்கள், அவரின் சித்தாந்திற்கு ஏற்றவாறு, பரிமேலழகப் பெருமானின் உரையை மறுத்தும், திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்கள்.
பரிமேலழகப் பெருமான் உள்ளிட்ட பெரும் புலவர்கள் பயன்படுத்தும் சீர்கள்(சொற்கள்) நாம் கீழே காண்பது.
“மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.” --- குறள் 610; அதிகாரம் – மடி இன்மை
இதை மறுத்து, புலவர் குழந்தை அவர்கள் இவ்வாறாக குறளைப் பார்க்கிறார்:
“மடியிலா மன்னவன் எய்தும் மடியளந்தான்
றாஅயது எல்லாம் ஒருங்கு.” --- குறள் 610; அதிகாரம் – மடி இன்மை
“மடியளந்து + ஆன்று + ஆயது = மடியளந்தான் + றாயது” என்று சொல்கிறார். சரி, இதற்கு என்ன பொருள்?
மடியளந்து என்றால் நமக்குத் தெரியும் மடியை மட்டுமே கொண்டிருப்பவன். அதாவது, சோம்பலில் திளைப்பவன்.
ஆன்றாயது என்றால் ஆன்று + ஆயது என்று பிரிக்கிறார். ‘ஆன்று’ என்ற சொல்லுக்கு ‘நீங்கி’ என்று பொருள். ஆன்றது என்றால் நீங்கியது என்று பொருள். ஆன்றது என்பது ஆன்றாயதாக திரிந்துள்ளது என்கிறார்.
அதாவது, இவரின் உரையில் என்ன சொல்ல வருகிறார் என்றால் சோம்பலில் இழந்த அத்தனையும் சோம்பல் நீங்க திரும்ப வந்துசேரும் என்பது இவர் கருத்து.
சரி, நல்ல விளக்கம்தான் என்றாலும் இதே கருத்துடைய குறளை நம் பேராசான் இந்த குறளுக்கு முந்தைய குறளிலிலேயே தெரிவித்திருக்கிறார். காண்க 04/03/2023 (730).
“குடியாண்மை உள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்.” --- குறள் 609; அதிகாரம் – மடியின்மை
ஒருவன் மடி ஆண்மை மாற்ற = ஒருவனிடம் ஆட்சி செய்து கொண்டிருக்கும் சோம்பல் என்னும் தன்மையை மாற்றி ஊக்கம் என்பதை ஆட்சி செய்ய வைத்தானெனில்; குடியாண்மை உள்வந்த குற்றம் கெடும் = குடிகளிடமும், குடிகளை நிர்வகிப்பதிலும் உள்ள குறைபாடுகள் நீங்கும், மறையும், அழியும்.
மீண்டும் அதே கருத்தை தெரிவிப்பாரா?, அதுவும், அடுத்தடுத்து தெரிவிப்பாரா? என்ற கேள்விகளும் எழுகின்றன?
சரி எப்படியோ, நமக்கு சில சொற்களும், புதிய விளக்கங்களும் கொள்முதல்!
இப்படி திருக்குறளானது பல சமய அறிஞர்களாலும், சமய மறுப்பாளர்களாலும் ஏற்றுக்கொள்ளும் வகையிலே அமைந்துள்ளது என்பதுதான் ஆச்சரியமானச் செய்தி.
உண்மை ஒன்றுதான். பார்வைகள்தான் வேறாகின்றன!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
