top of page
Search

மனத்தொடு வாய்மை ... குறள் 295

17/03/2022 (384)

ஆசிரியர் நேற்றைய பதிவைப் படித்துவிட்டுச் சொன்ன சில தகவல்களைச் சொல்கிறேன்.


மொழிக்கு இரண்டு பலன்கள் இருக்காம். ஒன்று பொருட் பயன், மற்றொன்று சப்தப் பயன்.

பொருட் பயன் அறிவைத்தாக்குமாம். சப்தப் பயன் உணர்வைத்தாக்குமாம்.


அதனால்தான் பாடல்கள் பல சந்தங்களில் புனையப் படுகிறதாம். மொழி தெரியாத பாடல்கள்கூட நம்மை அமைதிப் படுத்துவதை நாம் உணர்ந்திருப்போம். சில சமயம் நம்மை வெகுளவும் செய்யும்.


பாடல்களின் இசையில் subliminal messages (மறை பொருள்) இருக்குமாம். குழந்தைகள் கார்ட்டூன் (cartoon)களில் இதை உணரலாம்.


நிறை மொழி மாந்தர்களின் சொற்கள் மந்திரங்கள் என்று சொல்லப்படுகிறது.


வேதங்கள், ஹதீஸ்கள், தேவ வசனங்கள் சில சமயம் பொருள் விளங்காது. பொருளே இருக்காது. வெறும் சப்தங்களால் இட்டு நிரப்பப்பட்டிருக்குமாம்.


“திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்” ன்னு சொல்வது அதுதானாம். நிறைய செய்திகளைச் சொன்னார் என் ஆசிரியப் பெருமான். சமயம் கிடைக்கும்போது பார்ப்போம். இது நிற்க.


சரி நம் பேராசான் ‘மொழி’ குறித்துச் சொன்ன ஒரு குறளைப் பார்ப்போம்.


நம்ம வார்த்தைகளையே எப்படி மந்திரமா மாற்றுவது எனும் இரகசியத்தைச் சொல்கிறார் நம் பேராசான்.


“உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்” என்கிறார் மகாகவி பாரதியார்.


தானமும் தவமும் தான் செய்தல் அரிது என்கிறார் ஔவையார் பெருந்தகை.


“அரிது அரிது மானிடர் ஆதல் அரிது மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது பேடு நீங்கிப் பிறந்த காலையும் ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது ஞானமும் கல்வியும் நயந்த காலையும் தானமும் தவமும் தான்செயல் அரிது தானமும் தவமும் தான்செய்வ ராயின் வானவர் நாடு வழிதிறந் திடுமே.”


நம் பேராசான் குறளில்


மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானம் செய்வாரின் தலை.” --- குறள் 295; அதிகாரம் – வாய்மை


மனதோடு பொருந்தி ஒருவன் உண்மையைப் பேசுவானாயின், அவன் தவமும் தானமும் ஒருங்கே செய்பவர்களைவிட உயர்ந்தவன்


மனத்தொடு வாய்மை மொழியின் = மனதோடு பொருந்தி ஒருவன் உண்மையைப் பேசுவானாயின்; தவத்தொடு தானம் செய்வாரின் தலை = அவன் தவமும் தானமும் ஒருங்கே செய்பவர்களைவிட உயர்ந்தவன்


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)




10 views2 comments
Post: Blog2_Post
bottom of page