22/03/2022 (389)
மனம் என்பது என்ன? அது எப்படி செயல்படுகிறது? அது எங்கே இருக்கு?
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்வது கொஞ்சம் கடினம்தான்.
மேம்போக்காப் பார்த்தா நமது எல்லாச் செயல்களுக்கும் மனம்தான் காரணம் என்று சொல்வார்கள். மனசைக் கேட்டு செய்வதுதான் சரி என்பார்கள். உண்மையிலேயே நாம நம்ம மனசைக்கேட்டு மட்டும் செய்தால் என்ன ஆகும்?
ரொம்ப சிரமம்தான். முடிவு எடுக்கவிடாது.
“இரண்டு மனம் வேண்டும், இறைவனிடம் கேட்டேன் …” இந்தப் பாட்டைத்தான் பாடனும்.
ஆன்மீகத்தில் இருப்பவர்களைக் கேட்டால் மனம் என்பது ஒரு குப்பைத்தொட்டி. பல எண்ணப்பதிவுகளைச் சேர்த்து வைத்துக் கொள்ளும்.
எந்த நிகழ்வு நடந்தாலும் அந்த குப்பைத்தொட்டியிலே போய் தோண்டிப் பார்க்கும். பார்த்துட்டு ‘எனக்குத் தெரிந்தவரையில், இது தப்பு அது தப்பு’ன்னு சொல்லும். இதுதான் சரின்னு அடம் பிடிக்கும். மனசை அழிக்கனும் என்பார்கள்.
உண்மை அறிவுன்னு நமக்குஎல்லாம் ஒன்று இருக்கும். அது இயற்கையோட இயைந்ததாக இருக்கும். இணைந்ததாக இருக்கும். நாம வளர, வளர அந்த இணைப்பைத் துண்டித்துக் கொள்கிறோம். இருந்தாலும் அது நம்ம அடிமனதில் அந்த உண்மை அறிவின் பதிவுகள் இருக்கும். அதுதான், ஒரே நிகழ்வுக்கு, ஒவ்வொருவரின் அனுபவங்களை வேறுபடுத்தும். உணர்ச்சிகள் வேறுபடும்.
நாம எல்லாம் அன்றாட வாழ்க்கையிலே ஈடுபட்டு இருப்பதாலே நாம் சார்ந்திருக்கும் கூட்டத்தின் தாக்கம் நமது எண்ணப்பதிவுகளை ஏற்படுத்தும். இதிலே என்ன ஒரு சிறப்பு என்றால், அந்த கூட்டத்தை விட்டு விலகிட்டா அந்தத் தாக்கம் முற்றாகப் போயிடும்.
காந்தத்தோட இரும்பு சேர்ந்தால் அதுவும் காந்தம் போலச் செயல்படும். காந்தத்தை விட்டு விலகிட்டா இரும்பு இயல்பு நிலைக்குத் திரும்பிடும்.
நம்ம பேராசான் இல்வாழ்வில் இருப்பவர்களுக்குச் சொல்கிறார்.
அதைத்தான் நம்ம ஔவைப் பெருந்தகை “சேரிடம் அறிந்து சேர்”ன்னு சொல்றாங்க.
“மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல்.” --- குறள் 453; அதிகாரம் – சிற்றினம் சேராமை
மக்களுக்கு உணர்வு என்பது தன் ஆழ்மனத்தாலே அமையும். ஆனால் இவன் இப்படித்தான் இருப்பான் என்பது அவன் சார்ந்திருக்கும் கூட்டத்தப் பொறுத்ததுதான்.
அவனின் எல்லச் செயல்களுக்கும் அவன் மனம் மட்டுமே காரணமாக இருக்காதுன்னு அடித்துச் சொல்கிறார் நம் பேராசான்.
மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தானாம் = மக்களுக்கு உணர்வு என்பது தன் ஆழ்மனத்தாலே அமையும்; இனத்தான்ஆம் இன்னான் எனப்படும் சொல் = (ஆனால்) இவன் இப்படித்தான் இருப்பான் என்பது அவன் சார்ந்திருக்கும் கூட்டத்தைப் பொறுத்ததுதான்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments