23/03/2022 (390)
நேற்று பார்த்தக் குறளுக்கு தொடர்ச்சியாக அடுத்தக் குறளை அமைத்துள்ளார் நம் பேராசான்.
அறிவின் வெளிப்பாடு மனதிலிருந்துதான் என்பதுபோலத் தோன்றும்; ஆனால், அவன் சேர்ந்திருக்கும் இனத்து அறிவுதான் வெளிப்படும் என்கிறார் நம் பேராசான்.
இது எல்லாம் இல்லறத்தில் இருப்பவர்களுக்கு என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
“மனத்துளது போலக்காட்டி ஒருவற்கு
இனத்துளது ஆகும் அறிவு.” --- குறள் 454; அதிகாரம் – சிற்றினம் சேராமை
சிறப்பியல்புகள் ஒருவர்க்கு அவர் மனதின் மூலம் தான் வருகின்றன எனபது போலத் தோற்றமளிக்கும்; ஆனால், அந்த சிறப்பியல்புகள் தான் சார்ந்திருக்கும் இனத்தின் மூலமே ஏற்படுகின்றன.
அறிவு ஒருவற்கு மனத்துளது போலக்காட்டி = சிறப்பியல்புகள் ஒருவர்க்கு அவர் மனதின் மூலம் தான் வருகின்றன எனபது போலத் தோற்றமளிக்கும்; இனத்துளது ஆகும் = (ஆனால்,) அந்த சிறப்பியல்புகள் தான் சார்ந்திருக்கும் இனத்தின் மூலமே ஏற்படுகின்றன
சிற்றினம் சேராதீர்கள் என்பது நம் பேராசானின் குறிக்கோள். அதனால், பல வழிகளில் அதனை வலியுறுத்துகிறார்.
நம்மாளு: என்னைச் சுற்றி அந்த மாதிரி ஆளுங்கதானே இருக்காங்க. நான் எப்படி ஐயா என் இனத்தை மாற்றுவது? முடிகின்ற காரியமா?
ஆசிரியர்: கடினம்தான். முதலில், நீங்க செய்ய வேண்டியது இதிலிருந்து மாற வேண்டும் என்று நினைக்கனும். இங்கேதான் மனதின் வலிமையிருக்கு. ஒரு முறை மகான் ஓஷோவிடம் ஒருவர் கேட்டாராம்: ஐயா, நான் எப்படி ஒரு சரியான குருவை கண்டுபிடிப்பது? அதற்கு, மகான் ஓஷோ சொன்னாராம், "அது மிகவும் சுலபம்.முதலில், நீங்கள் ஒரு நல்ல சீடனாக மாறுங்கள். அப்போதே, உங்களுக்கு ஒரு குரு தென்படுவார்" என்றாராம்.
இதைத்தான், “action in advance” என்கிறார்கள். “பாவனை” என்கிறார்கள்.
நாம் எல்லோரும் குருவாக இருக்கத்தான் நினக்கிறோம். சீடனாக இருக்க விரும்புவதில்லை. என்று சொல்லிவிட்டு ஆசிரியர் அகன்றார் அவ்விடத்தைவிட்டு.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)

Comments