19/03/2022 (386)
பனையிலிருந்து இறக்கப்படும் நீர் சுண்ணாம்புடன் சேரும்போது இனிய பதநீர் ஆகின்றது. அது சுண்ணாம்புடன் சேராவிட்டால் புளித்து போதைதரும் கள் ஆகிறது.
ஒரே பனையில் இருந்து வந்த நீர்தான் என்றாலும் தான் சேர்ந்த இனத்தினால் ஒன்று அனைவருக்கும் இன்பம் அளிக்கின்றது. மற்றது போதையில் ஆழ்த்துகின்றது.
“ஒருதாய் வயிற்றில் உடன்பிறந்தார் ஏனும்
பெரியார் நட்புற்றார் பெரியர் – பெரியார்நட்
பில்லரேல் புல்லரே இன்பனை நீர் சுன்னமுறின்
நல்லது இன்றேல் பொல்லாதாம் நாடு.” ---பாடல் 91; தரும தீபிகை, கவிராஜ பண்டிதர் செகவீர பாண்டியனார்
நாம ஏற்கனவே ஒரு குறளை பார்த்துஇருக்கோம். மீள்பார்வைக்காக:
“மனத்துக்கண் மாசிலன்ஆதல்அனைத்துஅறன் ஆகுலநீரபிற.” --- குறள் 34, அதிகாரம் - அறன் வலியுறுத்தல்
மனசில் குற்றம் இல்லாதவனா ஆயிட்டா அது தான் அறம்; மற்றது எல்லாம் தேவையற்றது.
மன நலம் எல்லா ஆக்கங்களையும் தரும், அதுதான் அறம்ன்னு சொன்னாலும்கூட சிற்றினத்தோடு சேர்ந்துட்டா எல்லாம் கெட்டுவிடும். நல் இனத்தோடு சேர்ந்திருந்தால் புகழும் கிடைக்குமாம்.
‘புகழும்’ என்பது இறந்தது தழீஇய (தழுவிய) எச்ச உம்மை.
அதுஎன்ன இறந்தது தழீஇய (தழுவிய) எச்ச உம்மை? நாம பார்த்ததுதான்.
ராமுவும் ராஜாவும் பள்ளித் தோழர்கள். அவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன இருவரும் தேர்ச்சி பெற்றுவிட்டார்கள். ராஜா தன் அம்மாவிடம் “ராமுவும் பாஸாயிட்டான் (தேர்ச்சி அடைஞ்சிட்டான்)” என்று கூறினால் என்ன பொருள்? ராஜாவும் வெற்றி பெற்றான் என்று பொருளாகின்றது. அதுபோல, ‘புகழும்’ என்றால் மற்ற நல்லன எல்லாம் கிடைத்து புகழும் கிடைக்குமாம்.
“மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.” --- குறள் 457; அதிகாரம் – சிற்றினஞ்சேராமை
மன நலம் நமக்கு நல்லன கொடுக்கும்; மன நலத்தோடு இனநலம் இணைந்தால் எல்லாப் புகழையும் கொடுக்கும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments