மனந்தூய்மை செய்வினை ... 455, 685
24/03/2022 (391)
சிற்றினம் சேராமையில் மனம், இனம் இந்த இரண்டின் கூட்டினை மீண்டும், மீண்டும் வலியுறுத்துகிறார். மனம், இனம் இரண்டும் இணைந்ததே குணம் என்கிறார்.
சிற்றினம் சேராமை என்ற (46ஆவது) அதிகாரம் ‘பெரியாரைத் துணைக்கோடல்’ எனும் (45ஆவது) அதிகாரத்தைத் தொடர்ந்து அமைந்துள்ள அதிகாரம்.
செய்ய வேண்டியதை முதலில் சொல்லி, தவிர்க்க வேண்டியதை பின் சொல்கிறார்.
ஒரு நல்ல கூட்டத்திடையே நாம் இணைந்துவிட்டால், நம் மனம், மொழி, மெய்களால் செய்யும் செயல்கள் நல்லனவாக மாறுமாம்.
“மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.” --- குறள் 455; அதிகாரம் – சிற்றினம் சேராமை
நல்ல குணம் வெளிப்படத் தேவையான மனதில் தூய்மை, செய்யும் (மனம், மொழி, மெய்களால் செய்யும்) செயல்களில் தூய்மை ஆகிய இரண்டும் இனத்தின் தூய்மையால், வேண்டாம் என்றாலும் வரும்.
மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் = நல்ல குணம் வெளிப்படத் தேவையான மனதின் தூய்மை, செய்யும் (மனம், மொழி, மெய்களால் செய்யும்) செயல்களில் தூய்மை ஆகிய இரண்டும்; இனம் தூய்மை தூவா வரும் = இனத்தின் தூய்மையால் வேண்டாம் என்றாலும் வரும்.
‘தூவா’ என்ற சொல்லுக்கு ‘பற்றுக்கோடாக’ வரும் என அறிஞர் பெருமக்கள் பொருள் காண்கிறார்கள்.
நாம் தூது என்ற அதிகாரத்தில் ஒரு குறளைப் பார்த்துள்ளோம். மீள்பார்வைக்காக:
“தொகச் சொல்லி தூவாத நீக்கி நகச் சொல்லி
நன்றி பயப்பதாம் தூது.” --- குறள் 685; அதிகாரம் – தூது
கூறியவற்றைத் தொகுத்துச் சொல்வதும் வேண்டாதவற்றை நீக்கியும் மனம் மலர்ந்து சிரிக்கும் படியும்(சென்ற தூதினால்) நன்மை விளைவதும் தூது
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
