25/03/2022 (392)
மனத்தூய்மை உடையவர்க்கு வழித்தோன்றல்கள் நன்றாக அமைவார்கள். அதாவது, அவர்கள் அடியொட்டி பல நல்லவர்கள் தோண்றுவார்கள். இனம் நன்றாக அமைந்துவிட்டால் அவர்களுக்கு எல்லாச் செயல்களும் நன்றாக அமையும். அது மாறுபடாது என்கிறார் நம் பேராசான்.
“மனந்தூயார்க்கு எச்சம்நன்றாகும் இனந்தூயார்க்கு
இல்லை நன்றுஆகா வினை.” --- குறள் 456; அதிகாரம் – சிற்றினம் சேராமை
மனந்தூயார்க்கு எச்சம்நன்றாகும் = மனம் தூய்மையாக இருந்தால் அவர்கள் அடியொற்றி வருபவர்கள் நல்லவர்களாக இருப்பார்கள்; இனந்தூயார்க்கு
இல்லை நன்றுஆகா வினை = இனம் தூய்மையானால் அவர்களுக்கு நன்றாகாத செயல்கள் ஏதும் இல்லை.
வள்ளுவப் பெருமான், எடுத்துக் கொண்டப் பொருளை நன்றாக ஆழமாகச் சொல்லவேண்டும் என்று பல வகையிலும் சொல்லுவார்.
நம் பேராசான், சொல்ல வருவது சிற்றினத்தைத் தவிருங்கள். நல்லினத்தோடு சேருங்கள் என்பதுதான் அடிநாதம் இந்த அதிகாரத்தில்.
சிற்றினம் தவிர்த்தாலே பாதி வெற்றி; மீதி வெற்றியை நல்லினத்தோடு சேர்ந்து இயங்குவது தரும்.
திருக்குறள் அறம் சொல்லும் நூல் என்பது நமக்குத் தெரியும். அறம் என்பது என்ன என்று நம் பேராசான் சொன்னது கவனம் இருக்கும்.
அறம் என்பது விதித்தனச் செய்தல்; விலக்கியன ஒழித்தல். அவ்வளவுதான் அறம்.
எதைச் செய்யவேண்டுமோ அதைச் செய்யவேண்டும். எதைத் தவிர்க்க வேண்டுமோ அதைத் தவிர்த்து விடவேண்டும்.
நூலறுந்தப் பட்டம் போல சில சமயம் நிகழ்ந்தாலும் அதை உடனே தாவிப் பிடித்திடல் வேண்டும் என்பதனால், பல அதிகாரங்களைப் படைத்து திரும்பத் திரும்பச் சொல்கிறார் நம் பேராசான் நம் மேல் உள்ள கருணையினால்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments