top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

மன்னுயி ரோம்பி அருளாள் ...

07/12/2023 (1006)

அன்பிற்கினியவர்களுக்கு:

அருள் வாழ்வென்பதே நாம் பிறர்க்காக வாழும் காலம்தான். காலை நீட்டி உட்காருவதில்லை ஓய்வு. அல்லது, காட்டிற்குச் செல்வதுமில்லை ஓய்வு. வாழ்க்கையைத் தொடங்கி ஓடிக் கொண்டிருப்பவர்களுக்குத் துணையாக இருப்பதுதான் முதல் கடமை. நாம் இது நாள்வரை கற்றறிந்து உணர்ந்தவற்றை அடுத்தவர்களுக்குக் கடத்த வேண்டியதும் இன்னொரு கடமை. அதற்காக, முட்டை ஓட்டை உடைத்துக் குஞ்சுகளை வெளிக் கொண்டு வருவதுமில்லை.


பிற உயிர்களுக்கு வழிகாட்டியாக, நல்லதொரு துணையாக, முக்கியமாக அவர்களுடன் போட்டி போடாமல் இருப்பதுதான் அருளை ஆளுதல்.


ஆகக் கடைசியான அருவருப்புகள் மூன்று. அவை யாவன: 1. மகளுடன் போட்டிப்போட்டுக் கொண்டு தன்னை மிகுதியாக அழகு படுத்திக்கொள்ளும் தாய்; 2. உணவுக்காக மகனுடன் போட்டிப்போடும் தகப்பன்; 3. மாணவர்களுடன் போட்டிப்போட்டுக் கொண்டு தன் அறிவின் மிகுதியைத் தெரிவிக்கத் துடிக்கும் ஆசிரியன். இம்மூன்றினைத் தவிர்க்க வேண்டும்.


அருளுடைமை என்பது மற்ற உயிர்களிடம் அன்பு செலுத்தி அவர்கள் முன்னேற வழி வகை செய்வதுதாம். அவ்வாறு இருப்பவர்கள் தாம் அஞ்சுமாறு வரும் வினைகள் யாதொன்றும் இல்லை.


மன்னுயி ரோம்பி அருளாள்வாற் கில்லென்ப

தன்னுயி ரஞ்சும் வினை. --- 244; - அருள் உடைமை

மன் = பிற; மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு = பிற உயிர்களைப் பாதுகாக்கும் அருள் உடைமையை ஒழுகுபவர்களுக்கு; தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப = தங்களைத் தாம்தாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று அஞ்சக்கூடிய செயல்கள் ஏதும் இல்லை என்பர் சான்றோர்.


பிற உயிர்களைப் பாதுகாக்கும் அருள் உடைமையை ஒழுகுபவர்களுக்குத்தங்களைத் தாம்தாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று அஞ்சக்கூடிய செயல்கள் ஏதும் இல்லை என்பர் சான்றோர்.


அவர்கள் செய்யும் செயல்களால் அவர்களுக்கு ஒருபோதும் தீமை வாரா. நன்மையே வரும் என்பது கருத்து.


அறிஞர் பெருமக்களின் உரைகள் வருமாறு:


மணக்குடவப் பெருமான்: நிலைபெற்ற உயிரை ஓம்பி அருளை ஆள்வானுக்குத் தன்னுயிரஞ்ச வரும் வினை வருவதில்லையென்று சொல்லுவார். இது தீமை வாராதென்றது.


பரிமேலழகப் பெருமான்: மன்உயிர் ஓம்பி அருள் ஆள்வாற்கு = நிலைபேறுடைய உயிர்களைப் பேணி அவற்றின்கண் அருளுடையன் ஆவானுக்கு; தன் உயிர் அஞ்சும் வினை இல் என்ப = தன் உயிர் அஞ்சுதற்கு ஏதுவாகிய தீவினைகள் உளவாகா என்று சொல்லுவர் அறிந்தோர்.

உயிர்கள் எல்லாம் நித்தம் ஆகலின், 'மன் உயிர்' என்றார். அஞ்சுதல்- துன்பம் நோக்கி அஞ்சுதல். அன்ன அறத்தினோன் கொலை முதலிய பாவங்கள் செய்யான் எனவே மறுமைக்கண் நரகம் புகாமைக்கு ஏது கூறியவாறாயிற்று.


புலவர் குழந்தை: பிற உயிர்க்குத் தீமை செய்யாதவர்க்கு எவரும் தீமை செய்யாராகையால், அருளாளர் தம்முயிரைப் பற்றி அஞ்ச வேண்டியதில்லை. அருளாளர்க்கு அச்சம் இல்லை.


புலவர் புலியூர் கேசிகன்: நிலைபெற்ற உலகத்தில் உள்ள உயிர்களைக் காத்து, அருள் செய்து வாழ்கின்றவர்களுக்குத் தம் உயிரைக் குறித்து அஞ்சுகின்ற தீவினைகள் இல்லை!

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page