top of page
Search

மயிர்நீப்பின் ...969,

03/08/2022 (523)

தன்மானத்தை எப்போதும் வெற்றியாளர்கள் முன்னிறுத்துவதில்லை!


குடிமைக்கு அடுத்த அதிகாரம் “மானம்” (97ஆவது அதிகாரம்).


மானம் போச்சு! என்று சொல்கிறார்களே, மானம் என்றால் என்ன?


மணக்குடவப் பெருமான் மானத்தை குறித்து இவ்வாறு சொல்கிறார்:

மானம் என்பது ஒரு நல்ல குடியில் பயணிப்பவர்களுக்கு மிகவும் இன்றியமையாதது. எக்காலத்திலும் தனது நிலையில் இருந்து திரியாமைதான் மானம் என்கிறார். அப்போ, மானம் என்பது நம் செயலைப் பொறுத்தது. மற்றவர்கள் செய்யும் அவமானத்தால் போவதில்லை நம் மானம்!

மேலும் இது மூன்று வகைப்படுமாம்.


1. தமது தன்மை குன்றுவன செய்யாமை;

2. நம்மை இகழ்வார்கள் பின் செல்லாமை;

3. இழி செயல்களை ஆதரிக்காமை


மானத்தின் முக்கியமானக் குறிக்கோளே தனது குடியை உயர்த்துவதுதானாம். அதனால்தான் அந்த அதிகாரத்தை குடிமைக்கு பின் வைத்து இருக்காராம் நம் பேராசான்.


சும்மா வெட்டி மானம் நாம் சார்ந்திருப்பவர்களுக்கு உதவாது என்றால் அந்த மானம் எனும் தன்மானத்தை விட்டுவிடவும் தயங்கக் கூடாதுன்னு நாம ஏற்கனவே பார்த்திருக்கோம். காண்க 03/04/2021 (76). மீள்பார்வைக்காக:


குடிசெய்வார்க்கு இல்லை பருவம் மடிசெய்து

மானம் கருதக் கெடும்.” --- குறள் 1028; அதிகாரம் – குடிசெயல்வகை


குடிசெய்வார்க்கு = தன் குடியை உயர்த்தனும்னு நினைப்பவர்களுக்கு; பருவம் இல்லை = ஒரே வெயிலா இருக்கு, குளிர் அடிக்குது, மழையா இருக்கு அது இதுன்னு சாக்கு சொல்லிட்டு; மடிசெய்து = சோம்பிக்கிடந்து; மானம் கருதக் = தேவையில்லாம வெட்டி பந்தாவை பார்த்தா; கெடும் = ஒன்னும் பயனில்லை


தன் குடியை உயர்த்தனும்னு நினைப்பவர்கள் ஒரே வெயிலா இருக்கு, குளிர் அடிக்குது, மழையா இருக்கு அது இதுன்னு சாக்கு சொல்லிட்டு சோம்பிக்கிடந்து தேவையில்லாம வெட்டி பந்தாவை பார்த்தா ஒன்னும் பயனில்லை.


நிறைய பேர் தன் மானம் போச்சேன்னு உயிரை விட்டு விடுகிறார்கள். கேட்டால் வள்ளுவப் பெருமானே சொல்லியிருக்கிறார், “மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமா …” அதனாலே, உயிரைப் போக்கிக் கொள்கிறார்கள்.


தன்மானம் சிதைந்தால் அதை மீட்டு எடுத்துக் கொள்ளலாம். நம்மை அவமானப் படுத்தியவர்களை வெட்கித் தலை குனிய வைக்கலாம். நாம் எங்கெல்லாம் அவமானப் படுத்தப்படுகிறோமோ அங்கெல்லாம் நாம் வளருவதற்கான விதைகள் ஊன்றப் படுகின்றன! அதனால், நம்மை மாய்த்துக் கொள்ளத் தேவையில்லை.


அப்போ, நம் பேராசான் சொல்ல வருவது என்ன?


“நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லை” என்ற முறையில் உயிரை விடுவது சரின்னு சொல்கிறார்.


தன் குடிக்கு இழுக்கு வரும், மானம் கெடும் என்ற நிலையில் உயிரை விடுவது தவறில்லை என்கிறார். அதற்கு குறைந்து எதற்கும் உயிரை விடக்கூடாது!


தன்மானம், தன்மானம்ன்னு சொல்லி நிறைய பேர் அழிகிறார்கள். இது நமது வள்ளுவப் பெருமான் சொன்னதற்கு நேர் எதிரானது.


மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்.” --- குறள் 969; அதிகாரம் – மானம்


மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் = ஒரு முடி உதிர்ந்தாலும் உயிர் வாழாத கவரிமாவை ஒப்பார்; மானம் வரின் உயிர்நீப்பர் = உயிரை விட்டால்தான் தன் குடியின் மானம் காப்பாற்றப் படும் என்றால் உயிர் நீப்பர்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், கவரிமா என்று ஒரு விலங்கு அந்தக்காலத்தில் இருந்துள்ளது. அது தன் குடியைக் காக்கும் பொருட்டு சண்டையிடும்; எதிராளியின் தாக்குதலில் தனக்கு சிறிதளவு தாழ்வு வந்தாலும் அந்த தாழ்வினால் தன் குடிக்கு பெருமை குலையும் என்றால் உயிரை விட்டுவிடும் என்பதுதான்.


தன்மானத்தை எப்போதும் வெற்றியாளர்கள் முன்னிறுத்துவதில்லை!


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.





12 views4 comments
Post: Blog2_Post
bottom of page