மறத்தல் வெகுளியை ...குறள் 303
10/04/2022 (408)
மகாகவி தொடர்கிறார்:
…துச்சமெனப் பிறர் பொருளக் கருதலாலே
சூழ்ந்த தெலாம் கடவுளெனச் சுருதி சொல்லும்
நிச்சயமாய் ஞானத்தை மறத்தலாலே
நேர்வதே மானுடர்க்குச் சினத்தீ நெஞ்சில் …
பிறரை, பிறர் பொருளை, பிறவற்றை துச்சமாய் நினைப்பது தவறு என்கிறார். நம்மை சூழ்ந்திருக்கும் அனைத்தும் தெய்வம், நாமும் தெய்வம். இதுதான் சுருதி என்று சொல்லப்படும் வேத மறைகள் நமக்குச் சொல்வது. இந்த ஞானத்தை நாம் மறப்பதால்தான், மதிக்காமல் நடப்பதால்தான் மானுடர்களுக்கும், மற்றவைகளுக்கும் சினத்தீ நெஞ்சில் மூண்டுவிடுகின்றது.
சினத்தீ மற்றவர்களிடம் மூள நாம் எப்படி காரணமாகிவிடுகிறோம் என்பதைக் சொல்லிவிட்டார்.
சரி, அச் சினத்தீ நம்மிடம் மூண்டுவிட்டால் என்ன என்ன நடக்கிறது என்பதைச் சொல்கிறார்.
…சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச்
செத்திடுவார் ஓப்பாவார்; சினங்கொள்வார் தாம்
மனங்கொண்டு தங்கழுத்தை த் தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் மானுவாராம்
தினங்கோடி முறை மனிதர் சினத்தில் வீழ்வார்
சினம் பிறர் மேற்றாங்கொண்டு கவலையாகச்
செய்த தெணித் துயரக் கடலில் வீழ்ந்து சாவார் …
சினம் கொள்பவர்கள் தங்களைத் தாங்களே சிதைத்துக் கொள்கிறார்கள். பிறர் செய்யும் செயலுக்குத் தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொள்கிறார்கள். அதனால் தான் சினத்தை தவிர்க்க வேண்டும் என்கிறார்.
‘மனிதனுக்கு மரணமில்லை’ என்ற தலைப்பிலே மகாகவி அவர்களின் இறுதி உரையாக அமைந்தது இந்தக் கவிதை. ஈரோடு, கருங்கல் பாளைய நூலகத்தில் 1921 ஆகஸ்டு (August) மாதத்தில் அதாவது, அவர் இயற்கையோடு இணைவதற்கு ஓரு மாதத்திற்கு முன் (11, September 1921) பாடியது இந்தக் கவிதை. தத்துவச்சாரம் முழுவதையுமே இதில் இறக்கி வைத்திருக்கிறார் மகாகவி.
சரி, நாம குறளுக்கு வருவோம்.
யாரால நமக்கு கோபம் வந்தாலும் அதை மறப்பது நல்லதாம். கோபத்தாலே நமக்குத் தீமை மட்டும்தான் விளையுதாம்.
“மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல் அதனான் வரும்.” --- குறள் 303; அதிகாரம் – வெகுளாமை
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் =வலியார், ஒப்பார், மெலியார் யாராக இருந்தாலும் சினம் கொள்ள வேண்டாம்; தீய பிறத்தல் அதனான் வரும் = தீயவை அதானாலே வரும்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
