top of page
Search

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் ... 134

16/10/2023 (954)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

நூல்களின் நால்வகைகளில், ஓத்து என்பது ஒத்தக் கருத்துகளை மணி மணியாகக் கோத்து ஒரு மாலை போலத் தொடுத்துச் சொல்வது போன்று அமைந்த நூல். ஓத்து (பெயர்ச் சொல்) என்றால் நூல் என்று ஆகி வரும்.


ஓத்து (வினைச் சொல்) என்றால் இணைப்பது, சேர்ப்பது, கோப்பது என்று பொருள்படும். நம் பேராசான் “ஓத்துக் கொளல்” என்பதனால் வினைச்சொல் பொருத்தமாகவே இருக்கும்.

“ஓத்து” என்ற சொல் மட்டுமல்ல, “பார்ப்பான்” என்ற சொல்லையும் நம் பேராசான் இந்தக் குறளில் மட்டும்தான் பயன்படுத்தியுள்ளார். குறளைப் பார்ப்போம்:


மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.” --- குறள் 134; அதிகாரம் – ஒழுக்கமுடைமை


வள்ளுவப் பெருந்தகை சொல்ல விழையும் கருத்து: கற்றக் கலையை, நூல்களை, ஏன் மற்ற எதனையும் மறந்து சிதறவிட்டிருந்தாலும் மீண்டும் அதனை ஒரு சேரக் கற்று நம்முடன் இணைத்துக் கொள்ளலாம். ஆனால், ஒழுக்கத்தைச் சிதறவிட்டால் அதனை மீண்டும் கோக்க இயலாது என்பதுதான்.


“பார்ப்பான்” என்ற சொல்லின் பொருள் என்ன? அறிஞர் பெருமக்கள் அந்தணர் என்னும் அறவோர்களைக் குறிக்கலாம் என்கிறார்கள்.


மேற்கண்ட குறளின் கருத்து, ஏதோ ஒரு பிரிவினருக்கு மட்டும் சொல்வதாக இருக்குமா? இவர்களுக்கு மட்டும்தான் ஒழுக்கம் தேவை; மற்றவர்களுக்கு ஒழுக்கம் தேவையில்லை என்று வள்ளுவப் பெருமான் வேறுபடுத்திச் சொல்லும் வகையில் மற்றக் குறள்களில் எந்தக் குறிப்பும் இல்லை. முன்னரே, ஒழுக்கம் உடைமை குடிமை என்று பொதுவாகப் பொருள்படும்படி அறுதியிட்டுச் சொல்லிவிட்டார். அதுமட்டுமன்று, இழுக்கம் இழி பிறப்பாய்விடும் என்றும் சொல்லியுள்ளார்.


சரி, எப்படி பொருள் கொள்ளலாம்?


பார்ப்பான் மறப்பினும் (பார்ப்பான் - வினையாலணையும் பெயர்)= ஒழுக்கமுடைமையை எதிர் நோக்குவான்;

பார்ப்பான் மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும் = ஒழுக்கமுடைமையை எதிர் நோக்குவான் எதனை மறப்பினும் மீண்டும் கற்று இணைத்துக் கொளல் கூடும்; ஒழுக்கம் குன்ற பிறப்பு கெடும் = ஆனால், ஒழுக்கத்தையே மறந்தால் அவனின் பிறப்பு இழி பிறப்பாகிக் கெடும்.


ஒழுக்கமுடைமையை எதிர் நோக்குவான் எதனை மறப்பினும் மீண்டும் கற்று இணைத்துக் கொளல் கூடும். ஆனால், ஒழுக்கத்தையே மறந்தால் அவனின் பிறப்பு இழி பிறப்பாகிக் கெடும்.


உங்களின் கருத்து என்ன?


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page