top of page
Search

மறமானம் மாண்ட வழிச்செலவு ... 766

16/07/2023 (864)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

உலைவிடத்து உறு அஞ்சாமை (குறள் 762), அழிவின்றி அறைபோகாதாகி (குறள் 764), கூற்றுடன் மேல்வரினும் கூடி எதிர் நிற்கும் (குறள் 765) என்றெல்லாம் சொல்லிக் கொண்டே வந்த நம் பேராசானுக்கு ஒரு ஐயம் வந்துவிட்டது. தனித்தனியாகச் சொன்னால் எங்கே நாம் ஒன்றைக் கவனித்து மற்றதை விட்டுவிடுவோமோ என்று எண்ணி:


வள்ளுவப் பெருமான்: தம்பி, படை என்றால் நாலும் இருக்கணும்.


நம்மாளு: எந்த நாலு ஐயா?


வள்ளுவப் பெருமான்: அதான் தம்பி, முதலில் வீரம் இருக்கணும்.


நம்மாளு: அதான், தெரியுங்களே ஐயா.


வ.பெ: சரி, அடுத்து என்ன?


நம்மாளு: ஐயா... நீங்களே சொல்லிடுங்க ...


வ.பெ.: முதலில் வீரம், அதற்கு அடுத்து மானம் இருக்கணும்.


நம்மாளு: அது என்ன மானம் ஐயா?


வ.பெ: மானம் என்றால் அறத்தைத்தான் செய்கிறோம் என்ற பெருமை. பழிக்கு அஞ்சும் பேராண்மை - அது இருக்கணும். அடுத்து மாண்ட வழிச்செலவு இருக்கணும்!


நம்மாளு: ஐயா, வழிச் செலவு என்றால் கையிலே கொஞ்சம் பணம் இருக்கணும் அதானே?


வ.பெ: தம்பி கொஞ்சம் இல்லை. நிறையவே இருக்கணும்.


நம்மாளு: ஐயா, நீங்க சொல்வது ஒன்றும் புரியலை. பணம் இருக்கணும் என்பதைப் பற்றி நீங்க முன்பும் சொல்லவில்லை. என்னவோ, ஒரு பொடி வைக்கறீங்கன்னு தெரியுது. நீங்களே விளக்கமாகச் சொல்லிடுங்க ஐயா.


வ.பெ: மகிழ்ச்சி. தம்பி, நான் சொல்வது பணம் இல்லை. இங்கே மாண்ட வழிச் செலவு என்றால் நேர்மை, அஞ்சாமை, துணிவு, உயிரே போனாலும் காட்டிக் கொடுக்காதத் தன்மை இவைகளின் வழியாக வந்தவர்களாக இருக்க வேண்டும். அதாவது, வீரர்கள் வந்த வழி இதையெல்லாம் உறுதி செய்யும் விதமாக இருக்க வேண்டும்.


அதற்கு அடுத்து நான்காவதாக தேற்றம் இருக்கணும். தேற்றம் என்றால் செயலில், குறிக்கோளில் தெளிவு. இந்த நான்கும் உள்ள வீரர்கள் கொண்ட படைதான் தலைவனுக்கு அல்லது அரசனுக்குப் பாதுகாப்பான படையாகும்.


மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்

எனநான்கே ஏமம் படைக்கு.” --- குறள் 766; அதிகாரம் – படை மாட்சி


மறம் = வீரம்; மானம் = அறச்செயல்களால் வரும் பெருமை; மாண்ட வழிச்செலவு = சிறந்த வழியில், அதாவது, நேர்மை, அஞ்சாமை, துணிவு, உயிரே போனாலும் காட்டிக் கொடுக்காதத் தன்மையுடன் களம் பல கண்ட அனுபவம்; தேற்றம் = செயலில் தெளிவு; என நான்கே ஏமம் படைக்கு = என்ற இந்த நான்கு குணங்கள் நன்கு அமைந்த வீரர்கள் கொண்ட படைதான் பாதுகாப்பான படையாகும்.


வீரம், அறச்செயல்களால் வரும் பெருமை, சிறந்த வழியில், அதாவது, நேர்மை, அஞ்சாமை, துணிவு, உயிரே போனாலும் காட்டிக் கொடுக்காதத் தன்மையுடன் களம் பல கண்ட அனுபவம், மேலும் செயலில் தெளிவு என்ற இந்த நான்கு குணங்கள் நன்கு அமைந்த வீரர்கள் கொண்ட படைதான் பாதுகாப்பான படையாகும்.


நம்மாளு மனசுக்குள்ளே: (நான்கு என்று சொல்லி நாப்பதைச் சொல்லுவாரு போல. நல்லாதான் ஏமாத்தறாரு நம்ம பேராசான்.)


வ.பெ: என்ன தம்பி புரிஞ்சுதா?


நம்மாளு: நாப்பதும்... இல்லை, இல்லை, நாலும் புரிஞ்சுடுச்சு ஐயா!


சரி, நாளைக்குப் பார்க்கலாம் என்று வள்ளுவப் பெருந்தகை விடை பெற்றார்.


நாமும் நாளை சந்திப்போம். நன்றிகளுடன்...


உங்கள் அன்பு மதிவாணன்.




Commentaires


Post: Blog2_Post
bottom of page