top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

மறவற்க மாசற்றார் கேண்மை ... 106, 105, 800, 788

24/09/2023 (932)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

உதவி என்பதன் அளவு உதவி செய்யப்பட்டார் பெறும் உயர்வைப் பொறுத்தது என்றார் குறள் 105 இல். காண்க 13/09/2023. மீள்பார்வைக்காக:


உதவி வரைத்தன் றுதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து.” --- குறள் 105; அதிகாரம் – செய்ந்நன்றியறிதல்


ஒரு இக்கட்டான சூழலில் நல்லதொரு துணையாக, உறுதியாக நின்று உதவியவர்களின் தொடர்பை விட்டுவிடக் கூடாது. அதுபோன்ற குற்றமற்ற நல்ல நெஞ்சங்களின் செயல்களை எப்போதும் மறந்துவிடவும் கூடாது என்கிறார் நம் பேராசான்.


மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயார் நட்பு.” --- குறள் 106; அதிகாரம் – செய்ந்நன்றி அறிதல்


துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு துறவற்க= இக்கட்டான சூழலில் நல்லதொரு துணையாக, உறுதியாக நின்று உதவியவர்களின் தொடர்பை விட்டுவிடக் கூடாது; மாசு அற்றார் கேண்மை மறவற்க = அதுபோன்ற குற்றமற்ற நல்ல நெஞ்சங்களின் செயல்களை எப்போதும் மறந்துவிடவும் கூடாது.

எதனைத் தவிர்க்க வேண்டும் என்பதனை நட்பாராய்தலில் காட்டினார். காண்க 21/12/2021 (301). மீள்பார்வைக்காக:


மருவுக மாசற்றார் கேண்மைஒன்று ஈத்தும்

ஒருவுக ஒப்பிலார் நட்பு.” --- குறள் 800; அதிகாரம் – நட்பாராய்தல்


குற்றமற்றவர்களின் நட்பை நாடுக; அவர்களுக்கு ஒப்பு இல்லாத, அஃதாவது, துன்பத்தில் கைவிடும் நட்பினை எதையாவது கொடுத்தும் தவிர்க்க.


“துன்பத்துள் துப்பாயார்” என்பதனை உடுக்கை இழந்தவன் கை போல என்று விரித்தார் நட்பு என்னும் அதிகாரத்தில். காண்க 04/12/2021 (284). மீள்பார்வைக்காக:


உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

இடுக்கண் களைவதாம் நட்பு.” --- குறள் 788; அதிகாரம் – நட்பு


நாம் அணிந்திருக்கும் ஆடை நழுவி அவிழும் போது கை தானாகச் சென்று சரி செய்வது போல நண்பனுக்கு ஒரு துன்பம் என்றால் அப்போதே சென்று உதவுவதாம் நட்பு.


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page