top of page
Search
Writer's pictureMathivanan Dakshinamoorthi

மறைபெறல் ... 1180, 29/02/2024

Updated: Feb 29, 2024

29/02/2024 (1090)

அன்பிற்கினியவர்களுக்கு:

பறை என்றால் சொல்லுதல். சொல்லுதலைச் செய்யும் தோல் கருவிக்குப் பறை என்றார்கள். பறையைக் குறித்து நாம் ஏற்கெனவே சிந்தித்துள்ளோம். காண்க 19/09/2022.

 

அறைபறை ஒரு வினைத்தொகை. அறைகின்ற பறை, அறைந்த பறை, அறையும் பறை என விரிக்கலாம்.  அஃதாவது, எல்லா காலத்திலும் அவை சொல்வதை நிறுத்துவதில்லை.

 

எவை அவை? கண்கள்தாம். கண்கள் மன ஓட்டங்களை மற்றவர்களுக்குக் காண்பித்துக் கொடுத்துவிடும்.

 

கண்களும் நானும் வேறா என்ன? இல்லை!

 

காட்டிக் கொடுக்கும் இந்தக் கண்களை வைத்துக் கொண்டு ஊராரிடம் இச் செய்திகளை மறைக்க முடியுமா என்ன?

 

மறைபெறல் ஊரார்க் கரிதன்றால் எம்போல்

அறைபறை கண்ணார் அகத்து. - 1180; - கண் விதுப்பு அழிதல்

 

எம்போல் அகத்து அறைபறை கண்ணார் = என் உள்ளக் கிடக்கைகளை, நான் அல்லாடிக் கொண்டிருப்பதை அப்படியே படம் பிடித்து எல்லார்க்கும் காட்டிக் கொடுக்கும் இந்தக் கண்களை வைத்துக் கொண்டு; ஊரார்க்கு மறைபெறல் அரிது அன்று =  ஊரார்க்கு நான் மறைக்க நினைப்பதனைக் கண்டுகொள்வது அரிதானச் செயல் அன்று.

 

 

என் உள்ளக் கிடக்கைகளை, நான் அல்லாடிக் கொண்டிருப்பதை அப்படியே படம் பிடித்து எல்லார்க்கும் காட்டிக் கொடுக்கும் இந்தக் கண்களை வைத்துக் கொண்டு, ஊரார்க்கு நான் மறைக்க நினைப்பதனைக் கண்டுகொள்வது அரிதானச் செயல் அன்று.

 

“அறைபறை” என்று ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையில் பதினாறாம் பாசுரத்தில் பயன்படுத்துகிறார். பறை என்ற சொல்லைப் பதினொரு பாசுரங்களில் பயன்படுத்தியுள்ளார்.

 

… ஆயர் சிறுமியரோமுக்கு, அறைபறைமாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான் ... பாசுரம் 16; திருப்பாவை

 

அஃதாவது, மாயன் மணிவண்ணன் நேற்றே இந்த ஆயர் சிறுமியர்களுக்கு ஒன்றினைத் தருவதாகச் சொல்லியுள்ளான்! இங்கே, அறைபறை என்றால் தவிர்க்க முடியாத வாக்குறுதி (solemn promise).

 

எதனைத் தருவதாகச் சொன்னான் என்று சொல்லாமலே ஆண்டாள் நாச்சியார் பல இடங்களில் பறை என்றே குறித்துக் கொண்டே செல்வார். 29 ஆவது பாசுரத்திலும், 30 ஆவது பாசுரத்திலும் பறையை விரிப்பார்.

 

சிற்றஞ் சிறு காலே வந்துன்னைச் சேவித்து உன்

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்தும் நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்

மற்றை நம் காமங்கள் மாற்று ஏல் ஓர் எம்பாவாய். - பாடல் 29; திருப்பாவை

 

உன்னோடே இருந்து உனக்கே சேவை செய்யும் உரிமையாகியப் பறையை ஏற்றுக் கொள். மற்றைய வழிகளில் எங்களைத் திருப்பிவிடாதே என்கிறார் ஆண்டாள் நாச்சியார்.

 

இறுதியாக 30 ஆம் பாசுரத்தில்

 

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்

திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி

அங்கு அப்பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்

பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே

இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய். - பாடல் 30; திருப்பாவை

 

… திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி

அங்கு அப்பறை கொண்ட ஆற்றை …

அவர்கள் அவனுக்கே சேவை செய்யும் உரிமையைப் பெற்றதைக் கூறுகிறார். அது மட்டுமன்று, இந்த முப்பது பாடல்களும் சங்கத் தமிழ் மாலை என்கிறார். முத்து முத்தான முப்பது பாடல்கள் தூயத் தமிழில்! இவரின் காலம் ஏழாம் நூற்றாண்டு என்கிறார்கள்.

 

மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.




Comments


bottom of page