30/01/2024 (1060)
அன்பிற்கினியவர்களுக்கு:
எனது – யான் என்னும் செருக்குகளை நீக்க வேண்டும் என்றார் குறள் 346 இல்.
ஓய்வெடுக்கும் பருவத்தின் குறிக்கோள்கள் என்பன வாழும் போதே அமைதியுடன் இருப்பது; அப்படியே இந்த உலகத்தைவிட்டு நீங்குவது போன்றன.
அப்படி இருப்பவர்களுக்குத் தங்கள் உடம்பே சுமையாகத் தோன்றும். அதுதான் சரியும்கூட.
அந்த நிலையில், ஏதேனும் ஒரு பொருளின் மேல் கொஞ்சம் பற்று கொள்ளத் தொடங்கினால், அந்த ஒரு பற்று பலவாக விரிந்து நமக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் அமைதிப் பயணத்தினை அடியோடு அழிக்கும். மனம் மீண்டும் அலைபாய ஆரம்பிக்கும்.
முற்றும் துறந்த பட்டிணத்தார் பெருமானைக் கண்டு அரசனாக இருந்த பத்திரகிரியார் இல்லற வாழ்வைத் துறந்து துறவறத்தில் அடியெடுத்து வைக்கிறார்.
அவர்கள் இருவரும் திருவிடைமருதூர் என்னும் ஊரில் உள்ள சிவ பெருமான் கோவிலில் தங்க ஆரம்பித்தார்களாம். கிழக்கு வாயிலில் பட்டிணத்தடிகளும் மேற்கு வாயிலில் பத்திரகிரியாரும் அமர்ந்து இருப்பார்களாம். பத்திரகிரியாருக்கு மக்கள் பிச்சையாக அளிக்கும் உணவினைப் பெற்று அதைப் பட்டிணத்தடிகளுடன் பகிர்ந்து உண்பாராம். அதற்காக ஓடு ஒன்று வைத்திருந்தாராம்.
மேற்கு வாசலில் அமர்ந்திருக்கும் பத்திரகிரியாரின் அருகில் ஒரு நாய் பசியும் பட்டிணியுமாய் வந்து அமர்ந்ததாம். அதற்கு இரங்கி கொஞ்சம் உணவினை அளித்தாராம். அன்றைய தினம் முதல் அந்த நாய் அவருடனே ஒட்டிக் கொண்டதாம்! அந்த நாயுக்காகவும் பத்திரகிரியார் பிச்சை கேட்க ஆரம்பித்தாராம்!
ஒரு நாள், பிச்சைக்காரர் ஒருவர் பட்டிணத்தடிகளை அனுகி உண்ண ஏதாவது தங்களிடம் இருக்குமா என்று கேட்டாராம். அப்போது பட்டிணத்தடிகள் நானோ முற்றும் துறந்தவன். அதோ, அந்த மேற்கு வாயிலில் ஒரு இல்லறத்தான் இருக்கிறான், அவனைக் கேள் என்று அனுப்பி வைத்தாராம். இவரும் பத்திரகிரியாரிடம் சென்று நடந்ததைச் சொல்லி உணவு கேட்டாராம்.
அதைக் கேட்ட பத்திரகிரியார் தன் நிலையை உணர்ந்தாராம். தனது பிச்சைப் பாத்திரமும் இந்த நாயும் சேர்ந்துதான் நம்மை இல்லறதானாக்கி உள்ளது என்பதை உணர்ந்தாராம். உடனே, அந்தப் பிச்சைப் பாத்திரத்தை தூக்கி எறிந்தாராம். அதிலிருந்து சிதறிய ஓர் ஓடு நாயின் மேல்பட அந்த நாயும் இறந்து போனதாம்.
இது என்ன ஒரு கதை? இப்படியும் நடந்திருக்குமா? என்ற கேள்விகளெல்லாம் நம் மனத்தில் எழலாம்! இதில் உள்ள குறிப்புகளைப் பாருங்கள். ஒன்றின் மேல் பற்று வைக்க ஓடு வந்து ஒட்டிக் கொள்கிறது. பின் நாய் வந்து சேர்கிறது. பின் அதற்காக அதிகம் சேர்க்க வேண்டியுள்ளது. இவை இப்படித்தான் விரியும் என்பதனை எடுத்துச் சொல்ல வந்த கதை இது.
சரி, நாம் குறளுக்கு வருவோம். உடம்பே சுமையாக இருக்க வேண்டிய தருணத்தில், மீண்டும் பொருளின் மேல் பற்று வந்தால் அது எப்படிச் சரியாகும் என்கிறார்.
மற்றுந் தொடர்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க் குடம்பும் மிகை. – 345; - துறவு
பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை = இந்த உலகைவிட்டு அமைதியாக நீங்க வேண்டும் என்று நினைப்பவர்க்குத் தம் உடம்பே சுமை; மற்றும் தொடர்பாடு எவன் கொல் = அப்படி இருக்கும்போது மீண்டும் பொருள்களின் மேல் பற்று ஏற்படுமானால் அது எப்படிச் சரியாக இருக்கும்? கவனமாக இருங்கள்.
இந்த உலகைவிட்டு அமைதியாக நீங்க வேண்டும் என்று நினைப்பவர்க்குத் தம் உடம்பே சுமை. அப்படி இருக்கும்போது மீண்டும் பொருள்களின் மேல் பற்று ஏற்படுமானால் அது எப்படிச் சரியாக இருக்கும்? கவனமாக இருங்கள்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.

Kommentare