23/09/2022 (572)
அவளைப் போல கொஞ்சம் மாறிவிடு என்ற அறிவுரையை நிலவுக்குச் சொன்ன அவனுக்கு சந்தேகம் வந்துவிட்டது (குறள் 1117).
அவளைப் போல மாறிவிடு என்றால் அது எங்கனம் இயலும்? அப்படியே மாறிவிட்டாலும் பலரும் காணுமாறு நீ வானத்தில் இருந்தால்?
இந்த உலகில் உன்னை அடைய போட்டிகள், பொறாமைகள் இருக்கும். எதற்கும் நீ கவனமாக இருக்க வேண்டும்.
நீ ஒருவனைத் தேர்ந்தெடுத்துக் கொள். பின்பு மகாகவி பாரதி சொன்ன வரிகளையும் கவனத்தில் வைத்துக்கொள் என்கிறான்.
“காதலன் ஒருவனைக் கைப்பிடித்தே,அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து,
மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச்செய்து வாழ்வமடி! …” --- பெண்கள் விடுதலைக் கும்மி; மகாகவி பாரதி
“மாதர் அறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச்செய்து வாழ்வமடி” - பழமை, மூடத்தனம் அவைகளை ஒழித்து மாட்ச்சிமை பெறு!
சரி, நாம் குறளினைப் பார்ப்போம்.
“மலர்அன்ன கண்ணாள் முகம்ஒத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.” --- குறள் 1119; அதிகாரம் – நலம் புனைந்து உரைத்தல்
மலர் போன்ற கண்களை உடையவளின் முகம் போல நீயும் மாறிவிட்டால் பலரும் உன்னைக் காணுமாறு வைத்துக் கொள்ளாதே நிலவே!
மலர்அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின் = (என்னவள்) மலர் போன்ற கண்களை உடையவளின் முகம் போல நீயும் மாறிவிட்டால்;
பலர்காணத் தோன்றல் மதி = பலரும் உன்னைக் காணுமாறு வைத்துக் கொள்ளாதே நிலவே
“தோன்றல்” என்ற பெயர்ச்சொல் மகன், அண்ணன், அரசன், தலைவன் என்றெல்லாம் பொருள்படும். வினைச்சொல்லாக வரும் போது ‘தோன்றாதே” என்ற பொருள்படும். தோன்று+அல் = தோன்றாதே.
இடம் சுட்டி பொருள் காண்க என்ற வகையில் இந்தக் குறளில் வரும் ‘தோன்றல்” வினைச்சொல்லாக “தோன்றாதே” என்ற பொருளில் வருகிறது.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments