மிகல்மேவல் மெய்ப்பொருள் ...குறள் 857
22/04/2022 (420)
இகல்தான் கெத்து என்பவனின் வாழ்க்கை கடினம்தான் என்று சொன்ன நம் பேராசான் அடுத்தப் பாடலிலும் இகலின் தீமையை விளக்குகிறார்.
இகல் அதாவது மாறுபாடு மனசிலே வந்துவிட்டால், மனசு பல விளையாட்டுகளைக் (mind games) காண்பிக்கும். பழுதைக் கயிறு (இற்றுப் போனக் கயிறு)கூட பாம்பாகத் தெரியும்.
உண்மைப் பொருளைக் காணவிடாது இந்த இகல். இகலைப் பிடித்துக் கொண்டு தொங்குபவர்களின் அறிவு இருக்கே அது தீ அறிவு, அதாவது தனக்கும் பிறருக்கும் தீங்கு விளைவிக்கும் அறிவு என்கிறார் நம் பேராசான்.
மனசுக்குள்ளே நாம் என்ன விதைக்கிறோமோ அதை அது மென்மேலும் வளர்க்கும். அலாவுதீனின் அற்புத விளக்கு அது.
அதனாலேதான், மெய் ஞானிகள் எல்லாம் மனசைப்பழக்கு என்கிறார்கள். மனசை அடக்க நினச்சா அது அடங்காதாம்.
அப்போ, என்ன பண்ணனும் என்று கேட்டால் மனசை அறிய நினைக்கனுமாம். அதனிடம் பழகனுமாம். அறிய நினைத்தால்தான் அது அடங்குமாம்.
“நான் யார்?” என்றத் தேடலை பகவான் ரமணர் குறிப்பால் காட்டியிருக்கிறார். மனதை அறிதல் மட்டுமல்ல அதற்கு அப்பாலும் எப்படி பயணிப்பது என்பதையும் குறித்து வைத்திருக்கிறார். இது நிற்க.
மிகச் சிறந்த மெய்ப்பொருளைக் காண மாட்டார்களாம். அது யார் என்றால் இகலை மேவும் இன்னா அறிவு கொண்டவர்களாம்.
“மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.” --- குறள் 857; அதிகாரம் - இகல்
மேவல் = தழுவுதல்; இன்னா = தீய; இகல் மேவல் இன்னா அறிவினவர் = இகலைத் தழுவிக்கொள்ளும் தீய அறிவினை உடையவர்கள்; மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் = (வெற்றியை அளிக்கும், வெளிச்சத்தைக் காட்டும்) மிகச் சிறந்தவற்றை தழுவ வாய்ப்பளிக்கும் உண்மைப் பொருளைக் காணமாட்டார்கள்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
