22/09/2022 (571)
குறள் 1117ல், என்னவளா? வான்மதியா? நிலவு என்று தெரியாமல் விண்மீன்கள் பரிதவைப்பதைப் பார்த்து, விண்மீன்களிடம் நிலவின் தன்மைகளை எடுத்துச் சொல்லி என்னவள்தான் சிறப்பு மிக்கவள் நீ குழம்பத் தேவையைல்லை என்று சொன்னான்.
இந்தக் காதல் கொண்ட நெஞ்சம் இருக்கிறதே அது இளகிய நெஞ்சம். அதன் பால் அன்பு பொங்கிக்கொண்டே இருக்கும். யாருக்கும் இரங்கும்.
இதை நீங்களும் கவனித்து இருக்கலாம். கடற்கரையில் காற்று வாங்கிக் கொண்டு களித்து இருக்கும் காதலர்களிடம் யாராவது ஒரு உதவி கேட்டால் உடனடியாகச் செய்வர்! தங்களிடம் இருக்கும் பொருளைத் தாராளமாக முக மலர்ச்சியோடு மற்றவர்களுக்கு கொடுப்பர்!
விண்மீன்களிடம் பேசிவிட்டுத் திரும்புகிறான். ஆங்கே, அந்த வானத்திலிருக்கும் வெண்ணிலவின் முகம் வாடி இருப்பது போலத் தோன்றுகிறது அவனுக்கு.
அவனுக்கு மனம் இளகி விடுகிறது. “சே, நாம் ஏன் இந்த நிலவினை அப்படிச் சொன்னோம். அது என்ன பாவம் செய்தது?” என்று நினைக்கிறான்.
நிலவு ஏதோ காதலிக்க விரும்புவதைப் போலவும், அதனை அந்த வான் நிலவு அவனுக்குச் சொல்வதைப் போலவும் கற்பனை செய்கிறான்.
அந்த நிலவினை சமாதானம் செய்ய நினைக்கிறான் அவன். அதற்கு ஒரு குறள்!
“நிலவே நீ நீடூடி வாழ்வாயாக! நான் என்னவளை முன்னரே தேர்ந்தெடுத்து விட்டேன். இருப்பினும் உனக்கு ஒன்று சொல்வேன்.”
“நீயும் என்னவளைப் போல கொஞ்சம் மாறிவிடேன். உனக்கும் நிச்சயம் காதல் வாழ்வு உண்டு.” என்கிறான்.
(அப்போதும் அவனது காதலியைத்தான் உயர்த்துகிறான்! – Note this point your honour)
“மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.” --- குறள் 1118; அதிகாரம் – நலம் புனைந்து உரைத்தல்
நிலவே நீ நீடூடி வாழ்க! என்னவள் முகம் போல நீயும் என்றும் ஒளி பொருந்தியவளானால் உனக்கும் காதல் வாழ்வு உண்டு.
மதி வாழி = நிலவே நீ நீடூடி வாழ்க;
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் = என்னவள் முகம் போல நீயும் என்றும் ஒளி பொருந்தியவளானால்;
காதலை = (உனக்கும்) காதல் தலைப்படும்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Kommentare