25/10/2022 (601)
மதுரை மீனாட்சியம்மையின் இயற்பெயர் ‘தடாகை’. மதுரையை ஆண்ட மலையத்துவசப் பாண்டியன் – காஞ்சனை இணையருக்கு மகளாக ஒரு வேள்வியில் இருந்து தோன்றுகிறாள்.
தோன்றும்போது, வழக்கத்துக்கு மாறாக மூன்று மார்புத் தனங்களோடு பிறக்கிறாள். இதைக் கேள்வியுற்ற அவளின் தந்தை வருந்த, அப்போது அசரீரியாக ஒன்று கேட்கிறது.
“மன்னா, கவலைப் படாதே! தக்கப் பருவத்தில் அவளின் நாயகனைக் காணும்போது அவளின் மூன்றாவது தனம் மறைந்துவிடும்.”
தடாகை பிராட்டியார் அவரது தந்தைக்குப் பிறகு அரசியாக பதவி ஏற்று இமய மலைவரை அனைவரையும் வென்று கொண்டு செல்கிறார். ஆங்கே, சிவப் பரம் பொருளை எதிர் கொள்ள, அவரது மூன்றாவது தனம் மறைந்துவிடுகிறது. பின் என்ன? ‘மீனாட்சி கல்யாணம்’ மதுரையில் நடை பெறுகிறது.
சரி, இந்தக் கதை எதற்கு என்பதுதானே கேள்வி? இன்னும் கேள்விகள் இருக்கலாம். இது எல்லாம் சாத்தியமா? ஏன் தனங்கள் மூன்றாகத் தோன்ற வேண்டும்? பின் ஏன் அதில் ஒன்று மறைய வேண்டும்?
இது நடந்ததா, இல்லையா என்பதை பிறகு சிந்திப்போம். ஆனால் இந்தப் புராணத்தின் ஆசிரியர் சொல்ல வருவது என்ன?
அதாவது, எல்லோரும் அபர, பர ஞானங்கள் எனும் இரண்டுடன் பிறக்கிறோம். ஆனால், அதனோடு மூன்றாவதாக, அதனை மறைக்கும் விதமாக ‘அகந்தை’ எனும் ஒன்றுடன் சேர்ந்தே பிறக்கிறோம்.
இந்த ‘அகந்தை’ என்பது தக்கப் பருவத்தில் ஒரு குருவைக் காணும்போது மறையும். அந்த ‘குரு’ யாராக வேண்டுமானாலும், எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் – இந்த உலகில்!
இதைத்தான், அந்த ஆசிரியர், “மூன்றாகத் தோன்றி இரண்டாக மாறுகிறது என்கிறார்”
இந்தக் கதையை என் ஆசிரியப் பெருந்தகை விளக்கினார். அதை அப்படியே உங்களுக்கு தெரிவித்து விட்டேன்.
மீள்பார்வைக்காக: நாம் தான் பார்த்தோமே, ஞானங்கள் இரண்டு வகை.
ஒன்று அபர ஞானம், மற்றொன்று பர ஞானம்.
அபரஞானத்திற்கு இரண்டு படிநிலைகள்: 1. கேட்டல்; 2. சிந்தித்தல்
பர ஞானத்திற்கும் இரண்டு படி நிலைகள்: 3. தெளிதல்; 4. நிட்டை கூடுதல்
“அகந்தை” என்பதும் இரு வகைப்படுமாம். அவையாவன: ‘அகங்காரம்’, ‘மமகாரம்’. அதாவது ‘நான்’, ‘எனது’. அவை வரும்போது “நான் – எனது” என்று வருமாம். போகும் போது “எனது – நான்” என்று போகுமாம்.
இது எப்படி “எனது – நான்” என்று போகும்? என்பதற்கு, வாகீச கலாநிதி கி.வா.ஜ என்று அழைக்கப்பெற்ற தமிழ் அறிஞர் கி.வா. ஜகன்னாதன் அவர்கள் அவருக்கே உரித்தான பாணியில் இவ்வாறு சொல்கிறார்:
“நாம் போடும் போது பனியன் (Baniyan/vest) போட்டு பின் சட்டை (shirt) போடுகிறோம். கழட்டும் போது சட்டையைக் கழட்டிவிட்டு பின் பனியனைக் கழற்றுகிறோம் அல்லவா? அவ்வாறுதான்” என்கிறார்.
“இது என்னுடையது”, “அவன் என் மகன்/மகள்” (எனது) என்னும் பற்றை முதலில் நீக்க பின் ‘நான்’ என்பதை அழிக்கலாமாம்.
பின் ஞானம் தோன்றுமாம்.
நேரத்தின் அருமை கருதி நாளை தொடரலாம் என்று என் ஆசிரியப் பெருமான் நடையைக் கட்டிவிட்டார்.
குறளுடன் நாளை சந்திப்போம்.
நன்றி.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments