17/09/2022 (566)
ஒடிந்து விடுவது போல மெல்லிய தேகம், அதாவது கொடியிடையளாம்; முத்துக்கள் நகைப்பது போல் சிரிப்பு, அதாவது பற்கள் முத்துக்களாம்;
அவள் பக்கத்தில் போனாலே மயக்கமூட்டும் நறுமனம் கமழுமாம்;
கண்களோ அனைவரையும் சாய்த்துவிடும் வேலாம்;
மூங்கில் போன்ற தோள்களாம் – அவளே அவன் காதலியாம்!
இதுதான் காதலியைக் குறித்து ‘அவன்’ காட்டும் குறிப்புகள். உண்மையாகவா? என்று கேட்காதீர்கள்.
காண்பது அவன் கண்கள் அல்லவா? இதெல்லாம் அனுபவித்து பார்க்கனும்!
நம் பேராசான் இந்த அதிகாரத்திற்கு இட்ட தலைப்பு “நலம் புனைந்து உரைத்தல்”. கொஞ்சம் தூக்கலாகத்தான் இருக்கும். இருக்கனும். அதுதான் இலக்கியத்தின் இலக்கணம். அதில்தானே, அந்த அதிசயங்கள் நடக்கும்!
சரி, அந்தக் குறளைப் பார்ப்போம்:
“முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேல் உண்கண் வேய்த்தோள் அவட்கு.” --- குறள் 1113; அதிகாரம் – நலம் புனைந்து உரைத்தல்
அவளுக்கு, தளிர் மேனி, முத்தனைய சிரிப்பு, நறுமனம் கமழ் தேகம், அனைவரையும் சாய்க்கும் வேல் போன்ற கண்கள், மூங்கிலனைய தோள்…
அவட்கு = அவளுக்கு; முறிமேனி = தளிர் மேனி; முத்தம் முறுவல் = முத்தனைய சிரிப்பு; வெறி = அளவு கடந்த; வெறிநாற்றம் = சொல்லவொண்ணா ஒரு நறுமனம்; வேல் உண் கண் = அனைவரையும் சாய்த்துவிடும் வேல் போன்ற கண்கள்; வேய்த்தோள் = மூங்கிலனைய தோள்.
நம்ம பேராசான், இரண்டு அடியிலே நிறுத்த வேண்டும் என்று நிறுத்திவிட்டார். அதனாலென்ன, இன்னும் பல குறள்கள் இருக்கே அந்த அதிகாரத்தில்!
என்ன பண்ணப்போகிறார் என்று தொடர்ந்து பார்ப்போம்.
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
コメント