25/06/2023 (843)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
நாட்டை எதிரணியினர் சூழ்ந்து கொண்டார்கள். நாட்டின் அனைத்து வெளி உறவுகளும் துண்டிக்கப்பட்டு விட்டது.
அவர்களுக்குத் தேவையான அனைத்தும் அவர்கள் இடத்திலேயே கிடைக்கின்றன. அதனால் அந்த நாட்டில் உள்ளோர் கலங்கவில்லை. அஞ்சியும் நடுங்கவில்லை. அவர்கள் தொடர்ந்து வெற்றி நடை போடுகிறார்கள். எதிரணியினர் பின்வாங்கிவிடுகிறார்கள். இதுபோன்று இருக்கும் நிலைதான் அரணுக்கு இலக்கணம் என்கிறார் நம் பேராசான்.
1991 இல் நமது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) ரஷ்யாவின் கிளாவ்காஸ்மோஸ் (Glavcosmos) என்ற நிறுவனத்திடம் கடுங்குளிர் ஊட்டப்பெற்ற ஏவூர்தி இயந்திரம் (Cryogenic rocket engine) வாங்குவதற்கும் மேலும் இங்கேயே தயாரிப்பதற்கும் ஒரு ஒப்பந்தம் செய்தது.
இந்த இயந்திரம் ஆயுதம் தாங்கிய ஏவுகணைகளையும் (Ballistic missiles) செய்யப் பயன்படுத்தலாம் என்றுகூறி, 11/05/1992 இல், அமெரிக்கா (USA) நம் மீதும் ரஷ்யாவின் மீதும் கடுமையானத் தடைகளை விதித்தது. அமெரிக்காவைமீறி மற்ற நாடுகள் உதவ முடியாத நிலை அன்று!
தடை என்றால் அப்படி ஒரு தடை! அனைத்து வர்த்தக உறவுகளும் முற்றாக நிறுத்தப்பட்டன. நமது விண்வெளி ஆராய்சிகளை முடக்கிப்போட்டு விடலாம் என்று மனப்பால் குடித்தது.
ஆனால், என்ன நடந்தது?
இந்தத் தடையால் நாமே அந்த இயந்திரத்தைத் தயாரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டோம். செய்து முடித்தோமா? ஆமாம், 05/01/2014 அன்று அதே இயந்திரத்தைக் கொண்டு புவி ஒத்திசைவு (geosynchronous) வின்வெளி வாகனம் (Geosynchoronous satellite Launch Vehicle – GSLV) வெற்றிகரமாகத் தயாரிக்கப்பட்டு விண்ணில் செலுத்தப்பட்டது. அதன்பின் பல வெற்றிகரமான சாதனைகளை நம் இந்தியா நிகழ்த்திக் கொண்டு வருகின்றது.
உலகப் பரப்பில் இந்தியாவை, அமெரிக்கா மட்டுமல்ல, எந்த ஒரு நாடும் தவிர்க்க முடியாத நிலைக்கு மாறிப்போனதுதான் வரலாறு.
இதற்கு காரணம் நம் நாட்டின் திறமை மீது நாம் கொண்டிருந்த பற்று (passion).
பற்று இருந்தால் நம்மைப் பற்றிய பிணிகள் அகலும். குறிவைத்து தாக்கும் பகைவர்கள் (aggressors / opperessors) நம்மை வெல்வது கடினம். இதுதான் நம் பேராசான் அரணுக்குச் சொல்லும் அடுத்த இலக்கணம்.
“முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.” --- குறள் 748; அதிகாரம் – அரண்
முற்று ஆற்றி முற்றியவரையும் = தங்களது பெரும் பலத்தால் நம்மை சூழ்ந்து கொண்டு நம்மை முடக்க நினைப்பவர்களையும் (எதிர்த்து) ; பற்றியார் = ஆர்வத்துடன் நிலை குலையாமல் தங்களது இலக்குகளைக் கொண்டுள்ளவர்களை; பற்று ஆற்றி வெல்வது அரண் = அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள வழிவகுப்பதுதான் அரணுக்கு இலக்கணம்.
தங்களது பெரும் பலத்தால் நம்மை சூழ்ந்து கொண்டு நம்மை முடக்க நினைப்பவர்களையும் எதிர்த்து ஆர்வத்துடன் நிலை குலையாமல் தங்களது இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ள வழிவகுப்பதுதான் அரணுக்கு இலக்கணம்.
வெற்றி பெற வேண்டுமா? பற்றுதான் (passion) மந்திரச் சொல். அதுதான் அனைவருக்குமான அரண்.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனிடம் உங்கள் சிறப்புத் திறமைகள் என்னவென்று கேட்டபோது அவர் சொன்னது: "எனக்கு சிறப்புத் திறமைகள் எதுவும் இல்லை. நான் ஆர்வத்துடன் மட்டுமே ஆர்வமாக உள்ளேன்." என்றார்.
("I have no special talents. I am only passionately curious." - Albert Einstein)
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments