21/03/2024 (1111)
அன்பிற்கினியவர்களுக்கு:
காலைப் பொழுது ஒரு பரபரப்பை ஏற்படுத்தும். உலகம் இயங்கத் தொடங்கிவிடும். மாலையை நெருங்க நெருங்க ஒரு வித மன மயக்கம் ஏற்படும். ஆகையினால்தான், வேலை நேரம் என்று பகல் பொழுதை வைத்திருக்கிறார்கள். மாலை, இரவு ஓய்வெடுக்கும் நேரம். மனத்தை அமைதிப்படுத்தி அடுத்த நாளைக்குத் தயார் செய்யும் காலம். இஃது, இயற்கை.
மூளை சற்றே ஓய்வெடுக்க ஒதுங்கிக் கொள்ளும். செரிமானத்திற்குக் காரணமான உடல் உள் உருப்புகள் தங்களின் வேலையைச் செய்யும் நேரமும் இரவே.
இந்த ஒழுங்கெல்லாம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டது. இரவிலேதான் இப்போது வேலை. ஏன் என்றால் வேலையைக் கொடுப்பர்களுக்குப் பகல் பொழுது!
பளிச்சிடும் விளக்குகள் இரவைப் பகலாக்குகின்றன. நடுநிசியில் உணவகங்களில் விற்பனை அதிகமாக இருக்கிறதாம்!
இரவில் தூக்கமின்மை பல நோய்களுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன. கண்ணை விற்று வண்ணச் சித்திரம்! இது நிற்க.
நாம் அவள் என்ன சொல்கிறாள் என்று கேட்போம். கனவையும் நனவையும் படம் பிடித்தவளுக்கு, மாலையின் சோர்வு மனத்தைத் தாக்குகிறது. எவ்வளவு நாள்தான் வலிக்காதது போல நடிப்பது?
அவள்: முன்னாளில் நீ இன்பம் பயத்தாய். நீ வரமாட்டாயா என்று ஏங்குவேன். ஆனால், நீ அந்த மாலை அல்ல போலும். இப்போது உன் வேலையே மாலை சூடியவர்களின் உயிரை வாங்குவது என்று வைத்துக் கொண்டாயா? நீ ரொம்ப நல்லவளாகவே இரு!
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது. – 1221; - பொழுது கண்டு இரங்கல்
மாலையோ அல்லை = நாங்கள் இருவரும் முன்னாளில் கூடிக் களித்து மகிழ்ந்து இருந்த பொழுது இன்பத்தை அளித்த மாலைப் பொழுதைப் போல நீ இப்போது இல்லை; மணந்தார் உயிருண்ணும் வேலை = அவர் என்னருகில் இல்லாமல் பிரிந்திருக்கும் இற்றை நாள்களில், இந்த மாலைப் பொழுதுகளில், மணம் முடித்தவர்களின், உயிரை எடுப்பதே உனக்கு வேலையாகி விட்டதா? பொழுது நீ வாழி = மாலைப் பொழுதே, நாங்கள் வாட, நீ நன்றாக இரு!
நாங்கள் இருவரும் முன்னாளில் கூடிக் களித்து மகிழ்ந்து இருந்த பொழுது இன்பத்தை அளித்த மாலைப் பொழுதைப் போல நீ இப்போது இல்லை. அவர் என்னருகில் இல்லாமல் பிரிந்திருக்கும் இற்றை நாள்களில், இந்த மாலைப் பொழுதுகளில், மணம் முடித்தவர்களின், உயிரை எடுப்பதே உனக்கு வேலையாகி விட்டதா? மாலைப் பொழுதே, நாங்கள் வாட, நீ நன்றாக இரு!
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் மதிவாணன்.
Comments