19/08/2022 (538)
மேல், கீழ் என்பது மாற்றத்திற்கு உரியது. கோபுரத்தின் மீது குப்பை இருந்தாலும் அதன் மதிப்பு கூடாது. வெள்ளிப் பணத்தை அடித்து, மிதித்தாலும் அதன் மதிப்பு குறையாது.
.
ஆங்கிலத்தில் “Intrinsic value” என்று சொல்வார்கள். ‘உள்ளார்ந்த மதிப்பு’ என்று சொல்லலாம். ஒன்றினுள் மறைந்திருக்கும் மதிப்பு, உண்மையான மதிப்பு இப்படி Intrinsic value விற்கு பொருள் சொல்லலாம்.
இந்த Intrinsic valueவை நாம் உயர்த்திக் கொண்டே செல்ல வேண்டும். இதைத்தான் ‘மானம்’ என்றார் நம் பேராசான். அதனால் வருவதுதான் நம் குடிக்கு பெருமை என்றார் நம் பேராசான். இதற்கு ‘கல்வி’ ஒரு கருவி. இது நிற்க.
நாம் அடுத்து பார்க்கப் போகும் குறள்தான் மிக முக்கியம். நாம் ‘கணியன் பூங்குன்றனார்’ அவர்களின் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர் …” எனும் பாடலை பாடலை ஏற்கனவே சிந்தித்துள்ளோம். காண்க: 09/04/2021 (82), 21/11/2021 (271), 27/04/2022 (425).
அவர் அந்தப் பாடலில் இறுதியாகச் சொல்லவரும் கருத்தும், நாம் பார்க்கப் போகும் குறளுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அந்த கடைசி வரிகளைப் பார்ப்போம்:
“…
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.“--- பாடல்192; புறநானூறு
எவ்வளவு பெரியவர் தெரியுமா அவரை மாதிரி வரமுடியுமா என்றெல்லாம் வியந்தும் பேசத் தேவை இல்லை; அதே போன்று சின்னவங்களைப் பார்த்து இகழ்வது அதைவிட மோசம்.
சிலர், மேலான குடியில் இருப்பார்கள். இருப்பார்கள் அவ்வளவுதான்! அவர்களிடம் செல்வம்கூட மிகுதியாக இருக்கலாம். இருக்கலாம் அவ்வளவுதான்!
சிலர், கீழான குடியில் தோன்றியிருப்பார்கள். ஆனால் அவர்களிடம் உயரிய குணங்கள் மேலோங்கியிருக்கும். அவ்வாறு இருப்பவர்களை இந்த உலகம் மேலோன் என்றே ஏற்றும் என்கிறார் நம் பேராசான்.
“மேலிருந்தும் மேலல்லார் மேலல்லவர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர்.” --- குறள் 973; அதிகாரம் - பெருமை
“…
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.“
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
Comentarios