22/05/2022 (450)
அரசர்கள். தலைவர்கள் முதலான ஆற்றுபவர்களைப் பிழையாமை முக்கியம் என்று சொன்ன நம் பேராசான் மேலும் தொடர்கிறார்.
அடுத்த கட்ட ஆற்றுபவர்களுக்குச் செல்கிறார். ஆற்றுபவர்களில் முதல்தரம், அதாவது மிகவும் வலிமையுடையவர்களாக இருக்கும் தலைவர்கள்.
அரசர்கள், அரசுகளால் வெறுக்கப் பட்டவர்கள், ஒதுக்கப் பட்டவர்கள் எங்கே போயும் ஒளிந்து கொள்ள முடியாதாம். அவர்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க முடியாதாம்.
“யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.” --- குறள் 895; அதிகாரம் – பெரியாரைப் பிழையாமை
வெந்துப்பின் வேந்து = வெம்மையான வலிமையுடைய வேந்தர்களிடம்; செறப்பட்டவர் = வேறு பட்டவர், மாறுபட்டவர்; யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் = எங்கே போய் தஞ்சம் அடைந்தாலும் எந்தக் காலத்திலும் பிழைக்க முடியாது.
மிகவும் வலிமையுடைய வேந்தர்களிடம் மாறுபட்டவர்கள் எங்கே போய் தஞ்சம் அடைந்தாலும் எந்தக் காலத்திலும் பிழைக்க முடியாது. அதாவது, அரிதிலும் அரிதான பாதுகாப்பு வளையத்தாலும்கூட அவர்களை பாதுகாக்க முடியாது என்று சொல்கிறார்.
எதற்காக, இவ்வாறெல்லாம் எச்சரிக்கிறார்? நம் பேராசான்
அதாவது, பெரியாரிடம் ஏற்படும் மாறுபாடுகளை அளந்து, இடம், காலம் கருதிதான் எடுத்து வைக்க வேண்டும். இதில் ஏதோ, ஒன்று சரியில்லை என்றாலும் மௌனிப்பதே நலம்.
கருத்துகளைக் காட்சிப்படுத்தவும்கூட களமும் காலமும் கைப்படவேண்டும்!
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com )
Comments