08/11/2021 (258)
யாதும் ஊரே யாவரும் கேளிர் … புறநானூறு 192; கனியன் பூங்குன்றனார்
எல்லா ஊரும் எனக்கு சொந்த ஊர்; எல்லா மக்களும் எனக்கு உறவினர்கள் – இது தான் நம் கனியன் பூங்குன்றனார் சொல்வது. ரொம்பவே நல்லா இருக்கு இல்லை.
ஆனால், இது எப்போது சாத்தியம்?
ஓஒ, நீ அந்த ஊரான்னு இப்பவும் கேட்கத்தானே செய்கிறார்கள். இங்கேயே நாம ஒத்துக் கொள்வதில்லையே! பாட்டெல்லாம் நல்லாதான் இருக்கு. ஆனால், அது வேலைக்கு ஆகாதுப்பா என்பது போலதானே நடைமுறை இருக்கு. அந்தப் பாட்டைச் சொல்கிறவர்கள் எல்லாம் அது போல நடக்க முடியுமா?
முடியும். நிச்சயமாக நடக்கும். அது எப்போதுன்னு நம் பேராசான் சொல்லி வைத்துப் போயிருக்காரு. அதை மட்டும் நாம் கடைபிடிச்சாப் போதும், யாரையும் யாரும் சுலபமாக விலக்கிவிட முடியாது. அதற்கு விடை இருக்கும் போது அதனை ஏன் பயன்படுத்த மாட்டேன் என்கிறார்கள் என்பதுதான் நம் வள்ளுவப் பெருந்தகையின் கேள்வியாகவே இருக்கு. சாகும் வரையிலும் அதன் பக்கமே போகாம இருப்பது எனக்கு ரொம்பவே ஆச்சரியமாக் இருக்குன்னு நம்ம பேராசான் அங்கலாய்கிறார்.
அது என்னன்னு கேட்கறீங்களா? இதோ:
“யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையும் கல்லாதவாறு.” --- குறள் 397; அதிகாரம் - கல்வி
யாதானும் நாடாமால் ஊராமால் = யாதானும் நாடுஆம் ஊர்ஆம் = (கற்றவனுக்கு) தன் சொந்த நாடு மற்றும் சொந்த ஊர் மற்றுமன்றி எந்த நாடு, எந்த ஊர் சென்றாலும் அவனுக்கு அது சொந்த நாடு, சொந்த ஊர் போல ஆகிவிடும்; ஒருவன் சாந்துணையும் கல்லாதவாறு என்? = ஒருவன் தான் இறக்கும் வரையிலும் கல்லாதிருப்பது ஏன்?
தமிழில் ‘வெற்றி வேற்கை’ எனும் ஒரு நூல் உள்ளது நம் அனைவருக்கும் தெரிந்ததே. அதன் இன்னொரு பெயர் ‘நறுந்தொகை’. இதன் பொருள் நல்ல பாடல்களின் தொகுப்பு. இதனை இயற்றியவர் அதிவீரராம பாண்டியர் எனும் ஒரு அரசர். இவரின் காலம் கி.பி. 11 (அ) 12 என்று சொல்லுகிறார்கள்.
அந்த தொகுப்பிலிருந்து 35வது பாடல். நமக்கு எல்லாம் தெரிந்த பாடல்தான்:
“கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சைப் புகினும் கற்கை நன்றே” --- வெற்றி வேட்கை 35; அதிவீர ராம பாண்டியர்
கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு. அப்போதுதான் கனியன் பூங்குன்றனார் கண்ட ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’
கணவு மெய்ப்படும்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comments