12/10/2022 (590)
அவனின் காதல் நோய் ஊரார் அறியவில்லை என்ற விதத்தில் ஊராரை “அறிகிலார்” என்றான் குறள் 1139ல். அதையும் அவன் நேரடியாகச் சொல்லாமல் காம நோய் சொன்னதுபோல் சொன்னான்.
அவனுக்கு இப்போ கொஞ்சம் கோபம் அதிகமாகிறது. இயலாமை அதிகமாகும் போதும், அவசரப்படும் போதும் கோபம் வருவது இயற்கைதானே.
அவன்: இவங்களுக்கு எல்லாம் கொஞ்சம்கூட நான் படும்பாடு தெரியவில்லை. இவங்க யாரும் காதலித்து திருமணம் முடிக்கலையா என்ன? என்னைப் பார்த்து, நான் படும்பாட்டைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள். இவர்களுக்கு அறிவில்லையா என்ன?
நம்மாளு: என்ன அண்ணே, கோபம் கொஞ்சம் அதிகமாயிட்டுது போல! ‘அறிவில்லை’ அப்படி, இப்படின்னு ஆரம்பிச்சுட்டீங்க. அண்ணே, ஒருத்தனை நீங்க என்ன இல்லை என்று குத்திக்காட்டினாலும் பொறுத்துக் கொள்வான். உதாரணத்திற்கு, உனக்கு கண் இல்லையா, காது இல்லையான்னு கேட்டாலும் அவ்வளவு கோபம் வராது. ஆனால், அறிவு இல்லையான்னு கேட்டால் அவ்வளவுதான். யாராக இருந்தாலும் உடனே அவர்களுக்கு கோபம் அதிகமாயிடும்.
அவன்: பின்ன என்ன தம்பி, மடல் ஏறப் போகிறேன் என்ற செய்தி ஊருக்குள்ளே பரவிய பின்னும் யாரும் எனக்கு உதவி செய்ய வரவில்லை. அது மட்டுமல்ல, என்னைப் பார்த்து கேலியாக வேறு சிரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நான் போய் மொத்தமாக ‘அறிவில்லை’ ன்னு சொல்வேனா? அவர்களுக்கு ‘காதல் அறிவு’ இல்லையான்னுதான் கேட்கிறேன் தம்பி. நீ போய் கொஞ்சம் எடுத்துச் சொல்லு ப்ளிஸ்.
“யாம் கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்டது தாம் படாவாறு.” --- குறள் 1140; அதிகாரம் – நாணுத் துறவு உரைத்தல்
அறிவில்லார் யாம் கண்ணின் காண நகுப = காதல் அறிவு இல்லாதவர்கள் பார்வையிலேயே ஏளனச் சிரிப்பு சிரிக்கிறார்கள். அவர்கள் வாய் விட்டுச் சிரிக்கனுமா என்ன?
யாம்பட்டது தாம் படாவாறு = எனக்கு ஏற்பட்டிருக்கும் இந்த காதல் நோயை அவர்கள் அனுபவித்ததில்லை போல. அதனால்தான், அவர்கள் அந்த நமுட்டிச் சிரிப்பு சிரிக்கிறார்கள்.
அவன்: அவர்கள் எப்படி வேண்டுமானாலும் கேலி பேசட்டும். இன்னும் அதிகமாககூட அவர்கள் கேலி பேச வேண்டும், சிரிக்க வேண்டும். எல்லாம் நன்மைக்கே!
நம்மாளு: ‘ங்கே’…
நன்றி. மீண்டும் சந்திப்போம்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments