top of page
Search

வன்கண் குடிகாத்தல் ...

31/03/2023 (757)

செயலுக்குத் தேவையான 1) கருவிகள், 2) செயல் செய்ய ஏற்ற காலம், 3) செய்யும் வழிமுறைகள், 4) எளிதில் செய்து முடிக்கும் வழி அறிந்து செய்து முடிக்கும் செயல் போன்ற நான்கினையும் திறம்பட நிர்வகிப்பனே அமைச்சன் என்றார் குறள் 631ல்.

நம் பேராசான், ஒவ்வொரு குறளிலும் ஒரு முழுமையானக் கருத்தைச் சொல்லிச் செல்வார்.

ஆனால், அமைச்சனுக்கு வேண்டிய பண்புகளைச் சொல்லும் போது இரு குறள்களை இணைப்பதாக பரிமேலழகப் பெருமான் சொல்கிறார்.

அதாவது, ‘மாண்டது அமைச்சு’ என்று முடியும் வகையில் ஒன்றன் பின் ஒன்றாக இரு குறள்களைச் சொல்கிறார்.

முதல் குறளில் நான்கு பண்புகளையும், அடுத்து வரும் குறளில் நான்கு பண்புகளைச் சொல்லிவிட்டு ‘ஐந்துடன் மாண்டது அமைச்சு’ என்கிறார்.


அந்தக் குறளைப் பார்ப்போம்.


வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு

ஐந்துடன் மாண்டது அமைச்சு.” --- குறள் 632; அதிகாரம் – அமைச்சு


வன்கண் = அசைவின்மையும்; குடிகாத்தல் = குடிகளைக் காத்தலும்; கற்றறிதல் = நல்ல பல நீதி நூல்களைக் கற்று செய்ய வேண்டியன, தள்ள வேண்டியன அறிதலும்; ஆள்வினையொடு = முயற்சியும்; ஐந்துடன் மாண்டது அமைச்சு =மேற் சொல்லிய ஐந்து அங்கங்களுடன் சிறந்து விளங்குபவனே அமைச்சன்


1) அசைவின்மையும, 2) குடிகளைக் காத்தலும், 3) நல்ல பல நீதி நூல்களைக் கற்று செய்ய வேண்டியன, தள்ள வேண்டியன அறிதலும்; 4) முயற்சியோடு, மேற் சொல்லிய ஐந்து அங்கங்களுடன் சிறந்து விளங்குபவனே அமைச்சன்


அதாவது, பட்டியலிட்டது நான்குதான்! ஆனால் ‘ஐந்துடன்’ என்கிறார்.


அது எப்படி ஐந்து என்பதற்கு, பரிமேலழகப் பெருமான், முதல் குறளில் சொன்ன நான்கு அங்கங்களையும் இங்கே ஐந்து என்று போட்டு எழுதிக் கொள்ளுங்கள் என்கிறார்.


அதாவது:


1) அசைவின்மை (சோம்பலின்மை); 2) குடிகளைக் காத்தல்; 3) நூல்களைக் கற்றுஅறிதல்; 4) முயற்சி; 5) கருவி; காலம்; செய்கை; செய்யும்

அருவினை (ஒரு தொகையாக கருதுங்கள்) என்கிறார்.


ஆனால், சில அறிஞர் பெருமக்கள் அதெப்படி என்று கேட்கிறார்கள்.

ஒரு ஒரு குறளும் தனிதான்.


அதனால், சில அறிஞர் பெருமக்கள் குடிகாத்தலை குடிப்பிறப்பும் ஒழுக்கத்தைக் காத்தலும் என்று இரண்டாக்கி ஐந்துடன் என்பதற்கு அமைதி தருகிறார்கள். (மணக்குடவப் பெருமான் போன்றோர்).


சில அறிஞர் பெருமக்கள், கற்றறிதலை கற்றலும் அறிதலும் என இரண்டு அங்கங்களாக்கி ஐந்துடன் என்பதற்கு அமைதி காண்கிறார்கள். (பரிதியார், நச்சினார்க்கினியர் போன்றோர்).


நம் பேராசான் ஏன் இவ்வாறு எல்லோரையும் திணறடிக்கிறார்?


அதனால், அதை அதை அப்படியே எடுத்துக் கொள்வோம் நமக்கு ஒரு தெளிவு வரும்வரை!


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.

(வலைதளத்தில் தினமும் திருக்குறள் முதலான: www.easythirukkural.com)




Comments


Post: Blog2_Post
bottom of page