09/09/2022 (559)
“தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லாடா..”
“தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவனுக்கோர் குணமுண்டு …”
என்று பாடிய பெருமானார் யார் என்று நம் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
“கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது …” என்று பாடிய அதே பெருமானார்தான்!
தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞர் என்ற சிறப்பைப் பெற்றவர்.
அப்பெருமானாரின் பெயரிலே ஒங்கி வளர்ந்து நிற்கும் பத்து மாடி கட்டிடம் நமது தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் உண்டு.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கப் பெருந்தகைதான் அந்த சிறப்பு மிக்க கவிஞர். அவர் கவிஞர் மட்டுமல்ல, சிறந்த ஓவியர், நல்ல பல நூல்களை இந்த தமிழ் உலகிற்கு அளித்த செம்மல். மலைக்கள்ளன் என்ற கதை திரைப்படமாகவும் வந்து புரட்சிக்கு வித்திட்டது.
என்ன இன்றைக்கு ‘புணர்ச்சி மகிழ்தல்’ இல்லையா என்று கேட்பது தெரிகிறது.
இதோ, நாமக்கல் பெருமானாரின் வரிகளில்:
“கண்களைத் தாமரையென்று நினைத்தால் தாமரை போலவே இருக்கும். அல்லது குவளை, நீலோற்பம் என்று நினைத்தாலும் அவை போலவே தோன்றும். கன்னத்தை மாம்பழமென்று சுவைத்தால் மாம்பழம் போலவே சுவை தரும். உதட்டைத் தேனென்று நினைத்தால் தேன் போலவே இனிக்கும். இப்படியாக எதை எதை எப்படி எப்படி நினைக்கிறேனோ அது அது அப்படி அப்படிப் போலவே இன்பம் தரும்”
அவன்: என்னவள் இருக்கிறாளே அவளின் தோளில் நான் சாயும் போது, அந்த மலர் குழலாள், நான் விரும்ப, விரும்ப, விரும்பியபடி அவை அவை போலவே சுவை தருகிறாள்.
(இடக்கரடக்கலாகச் சொல்லப் படட்து. காமநூல் கூறும் அறுபத்தி நான்கும் அடங்குமாறு)
“வேட்ட பொழுதின் அவை அவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.” --- குறள் 1105; அதிகாரம் – புணர்ச்சி மகிழ்தல்
வேட்கை = விருப்பம்; வேட்ட = விரும்பிய; தோட்டார் = தோடு + ஆர்; தோடு = தொகுதி, சரம், கொத்து; தோட்டார் = கொத்தான மலர்களை அணிந்தவள்; கதுப்பு = குழைந்த கூந்தல்;
வேட்ட பொழுதின் அவை அவை போலுமே = (நான்) விரும்பிய பொழுது விரும்பியபடியே சுகம் தரும்
தோட்டார் கதுப்பினாள் தோள் = மலரணிந்த குந்தலைஉடையவளாகிய என்னவளின் தோளில் நான் சாயும்போது.
மலரணிந்த குந்தலைஉடையவளாகிய என்னவளின் தோளில் நான் சாயும்போது, நான் விரும்பியபடியே சுகம் தரும்…
அடடா, அடடா…
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
Comments