24/07/2021 (151)
தோராயமாக, இந்தப் பூமிப் பந்திலும் நம் உடலிலும் மூன்றில் ஒரு பங்கு நீர் இருக்காம். அவ்வளவு தண்ணீர் இந்த உலகப் பரப்பிலே இருந்தாலும், நாம் குடிப்பதற்கு ஏதுவான நீர் மிகவும் குறைவான அளவே (100 இல் வெறும் 4 பங்குதான்) இருக்காம்.
நம்ம உடம்பிலே பல முக்கியமான வேலைகளை நீர்தான் செய்கிறது. நம் உடம்பின் ஒவ்வொரு செல்களிலும் நீர் நிரம்பி இருக்கு. அது நமக்கு தேவையான ஊட்டச்சத்துகளை நம் உடம்பின் தேவைக்கு ஏற்றார்போல் கொண்டு சேர்க்கிறது. நமது மூளை நீரில் தான் மிதந்து கொண்டு இருக்கு! நீர் இல்லையென்றால் ஒன்றும் நடக்காது.
அதான் ‘தண்ணீ இல்லாத காட்டுக்கு அனுப்பிடுவேன்’ன்னு பயமுறுத்தறாங்க போல!
வேற்று கிரகங்களில் கூட நாம் தேடுவது நீரைத்தான்!
மழை நீர்தான் எல்லா நீர் வளத்திற்கும் அடிப்படை. நீரை வைத்துதான் தமிழர்கள் நிலங்களைப் பிரித்தார்கள். மலைகளின் மேல் பொழியும் மழை ‘ஆறு’ ஆக (river) மாறுகிறது. ஆறு என்றால் வழி/நெறி என்று பொருள் கொண்டார்கள் தமிழர்கள். உயர்ந்த நிலையில் இருந்து தோன்றினால்தான் அது நல்வழி. உயர்ந்த நிலையில் இருந்து தவறாமல் ஒழுகுவதால் அதை ‘ஒழுக்கு’ என்றும் அதன் அடிப்படையில் ‘ஒழுக்கம்’ என்ற சொல்லையும் உருவாக்கினார்கள்.
மலையில் ஆறுகள் தோன்றுவதால், மலையும் மலை சார்ந்த இடமும் ‘குறிஞ்சி’ என்றார்கள். ஆறு அப்படியே இறங்கி அடர்ந்த காடுகளின் ஊடே வரும். அந்தக் காடுகளும் அக்காட்டைச் சார்ந்தப் பகுதிகளையும் ‘முல்லை’ என்றார்கள்.
அந்த ஆறு அப்படியே சமவெளிக்கு வரும்போது அந்த நீரைத் தேக்கி பயிர் செய்வதற்கு ஏதுவான வயல்கள் உருவாகிறது. அந்த வயல்களும், வயல்சார் பகுதிகளையும் ‘மருதம்’ என்றார்கள்.
அந்த நீர் மேலும் அதன் பயனத்தை தொடர்ந்து கடைசியில் கலக்கும் கடலையும் கடல் சார்ந்தப் பகுதிகளையும் ‘நெய்தல்’ என்றார்கள். ஆற்றங்கரைகளில் நாகரீகங்கள் வளர்ந்தது!
‘பாலை’ என்கிற பகுதி முல்லையும் குறிஞ்சியும் தன் நிலை கெட்டு வறண்டு போவதால் அப்பகுதிகளை அவ்வாறு அழைத்தார்கள். இது நிற்க.
நம் பேராசான் என்ன சொல்கிறார் என்றால், இந்த பரந்து பட்ட நிலப்பரப்பு பல வகை நீரினால் சூழ்ந்து இருந்தாலும் மழை இன்றி பொய்துவிட்டால், இவ் உலகத்தில் உள்ள உயிர்களை பசி எனும் கொடுமை நின்று வாட்டும் என்கிறார்!
“விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள் நின்று உடற்றும் பசி.” --- குறள் 13; அதிகாரம் – வான் சிறப்பு
விண் = மழை (இடவாகு பெயர்); விண்இன்று பொய்ப்பின் = மழை வேண்டும் போது பெய்யாமல் பொய்குமானால்; விரிநீர் வியனுலகத்துள் = நீரினால் சூழ்ந்துள்ள அகன்ட உலகப்பரப்பில்; நின்று உடற்றும் பசி = (உள்ள உயிர்களை) பசி எனும் கொடுமை நின்று வருத்தும்/மாய்க்கும்.
மழையைப் போற்றுவோம்!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன். உங்கள் அன்பு மதிவாணன்.
コメント