02/10/2023 (940)
அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:
இன்றைய தினம் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினம்.
சக மனிதர்களின் உரிமைகளுக்காக மகாத்மா தனது வாழ்நாளில் சிறைகளில் கழித்தக் காலம் 2338 நாள்கள் என்று கணக்கிடுகிறார்கள். அஃதாவது, கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள்.
அண்ணல் அடிக்கடி வலியுறுத்துவது என்னவென்றால்:
“As a man changes his own nature, so does the attitude of the world change towards him. This is the divine mystery supreme. A wonderful thing it is and the source of our happiness. We need not wait to see what others do.” – Mahatma Gandhi
" ஒரு மனிதன் தன் இயல்பை மாற்றினால், அவனைப் பற்றிய உலகின் அணுகுமுறையும் மாறுகிறது. இதுதான் தெய்வீக இரகசியம். இது ஒரு அற்புதமான செய்தி; இதுவே நம் மகிழ்ச்சியின் ஆதாரமும் ஆகும். மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்க நாம் காத்திருக்க வேண்டியதில்லை.” - மகாத்மா காந்தி
மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும் என்கிறார் காந்தி அடிகளார். அவர் மேலும் சொல்வது:
“பிறரையும் நம் போல எண்ணிச் சரியானதைச் செய்யுங்கள்” --- மகாத்மா காந்தி அடிகள்
"Do unto others as you would have them do unto you." --- Mahatma Gandhi
சுருக்கமாகச் சொன்னால் நம்மைப் போலவே பிறரையும் பேணுவதுதான் நடுவுநிலைமை.
அப்போதுதான், நாடும் வீடும் தொடர்ந்து வளரும். அதுதான் நிலைத்து நிற்கும் வாழ்வியல் தத்துவமும்கூட (sustainable living).
நம்ம பேராசானின் தத்துவத்தைப் பாருங்க: ஏதேதோ நடுவுநிலைமைக்குச் சொல்லிக் கொண்டே வந்தவர் முடிவுரையாக என்ன சொல்கிறார் என்றால் “கொடுக்கல் – வாங்கல்”தான் வாழ்க்கை. அஃதாவது, இந்த வாழ்க்கையே ஒரு வாணிகம்தான் (series of transactions). அதை ஒழுங்காகவும் ஒழுக்கமாகவும் செய்தால்தான் தொடர்ந்து வாழ்க்கையைச் செலுத்த இயலும். அதை எப்படிச் செய்ய வேண்டும் என்றால் “பிறரையும் நம் போல எண்ணிச் சரியானதைச் செய்யுங்கள்.” அவ்வளவே.
“வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.” --- குறள் 120; அதிகாரம் – நடுவுநிலைமை
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் = இந்த வாழ்க்கையென்னும் வாணிகத்தை நன்றாகச் செய்தால்தான் வாழ்க்கை தொடரும்; பிறவும் தமபோல் பேணிச் செயின் = அது எதனால் தொடரும் என்றால் பிறரையும் நம் போல எண்ணிச் சரியானதைச் செய்ய வேண்டும்.
இந்த வாழ்க்கையென்னும் வாணிகத்தை நன்றாகச் செய்தால்தான் வாழ்க்கை தொடரும். அது எதனால் தொடரும் என்று கேட்பீர்களானால், பிறரையும் நம் போல எண்ணிச் சரியானதைச் செய்யுங்கள். நிச்சயம் தொடரும், செழிக்கும்.
பிறரையும் நம் போல் பேணுவோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
பி.கு: இந்தக் குறள் வாணிகம் செய்வார்க்குச் சொன்னது என்று அறிஞர்கள் பலர் பொருளுரைக்கிறார்கள். எனக்கென்னமோ அனைவருக்குமானது என்று தோன்றுகிறது.
Kommentare