01/07/2022 (490)
சூதில் வெல்லும் வழி நான் அறிவேன். எனக்கு கைராசி இருக்கிறது. என்றெல்லாம் சிலர் நினைப்பார்கள். தொடர்ந்து வெல்லவும் செய்வார்கள். அது மேலும் அவர்களுக்கு சூதாட ஊக்குவிக்கும்.
Online Rummy (இணையதளத்தில் சீட்டாட்டம், அதுவும் காசை வைத்து) என்ற கொடிய அரக்கன் நமது தமிழகத்தைப் பீடித்துள்ளான். அதனால், பலர் சத்தமில்லாமல் தங்கள் பொருளை இழக்கிறார்கள். தங்கள் உயிரையும் அழித்துக் கொள்கிறார்கள். இதற்கு தடை விதிக்க நீதி மன்றங்கள் மறுக்கின்றன. ஏன் என்று கேட்டால், அது ஒரு தொழில், அதனை நடத்துவது ஒருவருக்கு அடிப்படை உரிமை என்கிறது!
இந்த சூதிற்கு பல பிரபலங்கள் அழைக்கிறார்கள். வாங்க, வந்து விளையாடுங்க, நாங்க ரெடி, நீங்க ரெடியா? என்கிறார்கள்.
இதே, ஒருவர் தன் வீட்டில் பலரை அழைத்து, காசு வைத்து சூதாடினால் அது தவறு என்று சட்டம் சொல்கிறது. ஆனால், அதையே, இணைய தளத்தில் பல மடங்கு பெரிதாகச் செய்தால் சரியாகிவிடுகிறது. இது ஒரு நகை முரண்!
இதற்கு முன்பு ஒரு எண் பரிசுச் சீட்டு (number lottery) தமிழகத்தை சீரழத்தது. இப்படி பல உதாரணங்கள் இருக்கு.
ஏதோ, கொஞ்சம் ஜெயிப்பது போல் இருக்கும். தொடர்ந்து விளையாடினால் நம்மையும், நம்மிடம் இல்லாததையும் சேர்த்து இழுத்து. அழித்துவிடும்.
இது எப்படி இருக்கிறது என்றால், தூண்டிலில் சிறிதளவு உணவினை வைத்து மீன்கள் வசிக்கும் நீர்நிலைகளில் போட்டால், தன் கண் எதிரே சுலபமாக கிடைக்கும் இரைக்கு மயங்கி, மீன்கள் அதை எடுக்க முயலும். அப்போது, அந்த மீன்கள் தூண்டிலில் சிக்கி உயிரை இழக்கும் அது போல என்கிறார் நம் பேராசான்.
“வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று.” --- குறள் 931; அதிகாரம் - சூது
வென்றிடினும் சூதினை வேண்டற்க = வெல்லும் வழி எனக்குத் தெரியும் என்றாலும் சூதின் பக்கம் போகாதே;
வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று = வென்று விட்டோம் என்று நினைக்கும் மாத்திரத்தில், மீன் எப்படி இரையை விழுங்கும் போதே தூண்டிலில் மாட்டிக் கொள்கிறதோ அவ்வாறு மாட்டிக் கொள்வாய்
தூண்டிற் பொன் = பளபளப்பாகத் தோன்றும் இரையால் மறைக்கப்பட்ட தூண்டில்
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments