top of page
Search

வேண்டுங்கால் வேண்டும் ... குறள் 362

30/04/2022 (428)

கடவுள் கிட்ட வேண்டுவதுன்னு முடிவு பண்ணிட்டால், என்ன வேண்டனும் தெரியுங்களா? என்றார். (மௌனமே என் பதில் என்பதிலே என்ன சந்தேகம்)


வள்ளுவப் பெருமான் சொல்லி வைத்திருக்கிறாராம். கணிய பெருமான் பாடலின் உள்பொருளும் அதுதானாம். அதனால்தான், அந்தப் பாடலுக்கு பொருள் விளக்கம் சொல்லும் போது சிக்கல் வருதாம் பல பேருக்கு என்றார் ஆசிரியர்.


நாம் ரொம்ப நாளைக்கு முன்னாடி பார்த்த வாழ்க்கைப் பகுப்பினை கவனம் வைத்துக் கொள்ள வேண்டும். காண்க 25/02/2021 (39).


மீள்பார்வைக்காக: வாழ்க்கையை நான்கு பகுதிகளாக பிரிக்கறாங்க. ஒன்று – கற்கும் பருவம், இரண்டு – வாழும் பருவம், மூன்று – ஒய்வு எடுக்கும் பருவம், நான்கு – விலகும் பருவம். இதைத்தான், பிரம்மச்சரியம், கிருகஹஸ்தம், வானப்பிரஸ்தம் மற்றும் சந்நியாஸம்ன்னு நாலு ஆச்சிரமங்கள்ன்னு சமஸ்கிருத்ததிலே சொல்றாங்க.

நம்ம பேராசான், முதல் இரண்டினை சேர்த்து இல்லறவியல் என்றும், அடுத்த இரண்டினை இணைத்து துறவறவியல் என்றும் பகுத்து அறத்துப் பாலில் வைத்துள்ளார். அது தான் மூல அறப் பகுதி. அடுத்து வரும் பொருட் பாலும், இன்பத்துப் பாலும் சார்பு அறங்கள். மூல அறத்துக்கும் சார்பு அறங்களுக்கும் இடையில் ஒரு இயல் வைத்துள்ளார். அந்த இயலில் ஒரே ஒரு அதிகாரம்தான். அந்த அதிகாரம்தான் “ஊழ்”.


துறவறவியலின் கடைசி அதிகாரமாக நம் பேராசான் வைத்துள்ளதுதான் “அவா அறுத்தல்” எனும் அதிகாரம்.


இல்லறத்திலேயே அவாவை அறுத்துவிடக் கூடாது. அது முட்டையை நாம் உடைத்து குஞ்சினை வெளியே எடுக்கும் முயற்சி! கணிய பெருமான் சொன்ன பாடல், துறவறத்தின் முதிர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு சொன்னது. இது நிற்க. குறளுக்கு வருவோம்.


அதாவது, வேண்டனும் நினைத்து விட்டீர்களா, என்ன வேண்டனும் என்ற கேள்விக்கு நம் பேராசானின் பதில் சற்று ஆச்சரியமாக இருக்கும். பிறவாமையை வேண்ட வேண்டும் என்கிறார். நேராக அந்தக் குறளைப் பார்த்தால் இது எப்படி சரி என்று கேள்வி எழலாம். அதனால்தான், பலவற்றைச் சொல்லிவிட்டு கடைசியில் சொல்கிறார். ‘ஆசையை அழி’ என்றார் புத்த பகவான். நம் பேராசான் அதற்கும் ஒரு படி மேலே சென்று பிறவாமையை வேண்ட வேண்டும் என் கிறார்.


அதை வேண்டிட்டா ‘அவா அறுத்தல்’ ஆசையை அழித்தல் தானாக வரும் என்கிறார். இதைத்தான் மேலான்மையில் (Management) திரும்ப திரும்ப சொல்கிறார்கள். Focus on end results; everything will fall in line. இறுதி முடிவுகளில் கவனம் செலுத்துங்கள்; எல்லாம் தானாகவே ஒரு கோட்டில் இணையும் என்கிறார்கள்.


வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றுஅது

வேண்டாமை வேண்ட வரும்.” --- குறள் 362; அதிகாரம் – அவா அறுத்தல்


வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை = வேண்டினால் இன்னொரு பிறப்பு வேண்டாம் என்று வேண்டுங்கள்; மற்று அது = மற்றவை எல்லாம் குறிப்பாக அவாவின்மை; வேண்டாமை வேண்ட வரும் = பிறப்பு வேண்டாம் என்று வேண்டிக் கொண்டால் தானக ஆசையை அறுத்தல் தோன்றும்.


(மறுபிறப்பு இல்லை என்பவர்களுக்கும் இயற்கையே இறை என்பவர்களுக்கும்: நீங்க போன பிறகு உங்களின் எச்சங்கள்/புகழ் எனக்கு வேண்டாம் என்று முடிவு எடுங்கள். அதுவே ஆசையை அறுத்து விடும் உங்கள் புகழை காலமே நிர்ணயம் செய்யும், கவலை வேண்டாம். இதுதான் கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்பதன் பொருள்)


உலகத்தை விட்டுப் பிரிய, அமைதியுடன் நீங்க இதுதான் வழி என்கிறார் நம் பேராசான்.


இதுதான் ரிக் வேதத்தில் மஹா மிருத்யுஞ்ஜய மந்திரமாக உள்ளது.


முக்கண்ணனே, அளவில்லா ஆற்றல் உடையவனே, நான் வேண்டுவது என்னவென்றால் எப்படி வெள்ளரி பழுத்துவிட்டால் தானாகாவே அதனை இணைக்கும் கொடி சுருங்கி அந்த வெள்ளரியை ஒரு வலியில்லாமல் பிரித்துவிடுமோ அது போல என்னையும் இவ்வுலகில் இருந்து பிரித்து பிறவாமை எனும் முக்தியைக் கொடு என்பதுதான்.


“ஓம் த்ரயம்பகம் யஜாமஹே ஸூகந்திம் புஷ்டிவர்த்தனம்

உர்வாருகமிவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத் …”


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.


(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)

10 views2 comments
Post: Blog2_Post
bottom of page