22/12/2023 (1021)
அன்பிற்கினியவர்களுக்கு:
ஓய்வெடுக்கும் பருவத்தினர் விரும்புவது என்ன?
மன அமைதி, நிம்மதி. மேலும் நிம்மதியாக இந்த உலகைவிட்டுப் பிரியும் வழி. தாம் மறைந்தபின்னும் நிலைக்கும் புகழ் அவ்வளவே. இவற்றுக்கும் மேல் வீட்டுப் பேறு என்கிறார்களே அதனையும் விரும்பலாம். அஃதாவது, மறுமை வாழ்வு.
சரி, இவையெல்லாம் எப்படிக் கிடைக்கும்? அதற்கு வழி இருக்கிறதா? அதுவும் நாம் நினைக்கும் விதத்தில் கிடைக்குமா?
இருக்காம். தவம்தான் அந்த வழி. தவம் செய்தால் வேண்டியவை வேண்டியபடி கிடைக்குமாம். ஆகையால் தவம் செய்வீர். தவம் என்றால் நமக்குத்தான் தெரியுமே: உற்ற நோய் நோன்றல்; உயிர்க்கு உறுகண் செய்யாமை.
வேண்டிய வேண்டியாங் கெய்தலாற் செய்தவம்
ஈண்டு முயலப் படும். – 265; - தவம்
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் = இல்லறத்தின் ஓய்வெடுக்கும் பருவத்தில் வேண்டியவை வேண்டியபடியே அடையமுடியும் என்பதனால்; செய்தவம் ஈண்டு முயலப்படும் = செய்தவம் இப்பருவத்தில் முயலப்படும்; ஈண்டு = இப்பருவம்.
இல்லறத்தின் ஓய்வெடுக்கும் பருவத்தில் வேண்டியவை வேண்டியபடியே அடையமுடியும் என்பதனால் செய்தவம் இப்பருவத்தில் முயலப்படும்.
செய்தவம் வினைத்தொகை: செய்த தவம்; செய்கின்ற தவம்; செய்யும் தவம். எல்லாக் காலத்திற்கும் பொருந்தும் செயல் அஃது ஆதலால்.
சீர்காழியில் திருஞானசம்பந்தப்பெருமான் இறைவனிடம் இறைஞ்சுவது எதுவென்றால் தவநெறியைத்தான்.
அந்தப் பாடலில் பாடி, ஆடி, சாடி என்று பல வினைகளைக் குறிப்பால் உணர்த்தி இப்போது எமக்குத் தவநெறியை அருள் என்கிறார்.
பாடினை அருமறை வரன்முறையால்
ஆடினை காணமுன் அருவனத்திற்
சாடினை காலனைத் தயங்கொளிசேர்
நீடுவெண் பிறைமுடி நின்மலனே
நினையேஅடி யார்தொழ நெடுமதிற் புகலிந்நகர்
தனையேயிட மேவினை தவநெறி அருள்எமக்கே. --- 2825; திருஞானசம்பந்தர்; தேவாரம், மூன்றாம் திருமுறை
பாடி, ஆடி, சாடி வாழ்ந்துவிட்டேன். போதும். இனி எனக்குத் தவ நெறியைத்தா என்று கேட்கிறார். அவர் வாழ்ந்த ஆண்டுகளோ பதினாறுதாம்! பல்லாயிரக் கணக்கான பாடல்களைப்பாடியுள்ளார் என்றும் அவற்றுள் நமக்கு கிடைத்தவை 4158 பாடல்கள் என்றும் குறிக்கிறார்கள்.
பன்னிரு சைவத்திருமுறைகளுள் முதல் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்தப்பெருமானின் பாடல் தொகுப்புகளாகும்.
ஓய்வெடுக்கும் பருவம் அவர்க்கு ஆண்டுகள் பதினாறுக்குள்ளேயே வந்துவிட்டது! அவர் வாழ்ந்த காலம் ஏழாம் நூற்றாண்டு. தவ நெறியை வேண்டி நின்று தாண்டிச் சென்றுள்ளார்.
ஈண்டு செய்தவம் முயலுவோம்.
மீண்டும் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments