top of page
Search

வெண்மை எனப்படுவது ... 844

14/08/2023 (892)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

எதிராளிகளுக்கு எந்தவித வேலையையும் கொடுக்காமல், திரு. புல்லறிவாளர் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் வல்லமை பெற்றவர் என்று குறள் 843 இல் சொன்னார்.


சரி, அவரை எப்படி இனம் காண்பது? அவரின் தனிக் கூறுகளால் நாம் ஒரு வேளை பாதிக்கப்பட்டுள்ளோமா? எப்படி அறிவது?


இந்தக் கேள்விகளுக்குப் பதிலாக அடுத்தப் பாடலை வைத்துள்ளார்.


அந்தப் பாடலைப் பார்ப்பதற்கு முன் “வெண்மை” என்றால் என்னவென்று பார்ப்போம்.


நம்மாளு: ஐயா, இதுதான் எனக்குத் தெரியுமே. வெண்மை என்பதனை ஒரு வண்ணம் என்றும் சொல்லலாம். அதனை white என்பார்கள் ஆங்கிலத்தில். வெண்மை நிறம் சாந்தியையும் சமாதானத்தையும் குறிக்கும். வெண்மையாக இருக்கிறான் என்றால் மனத்தில் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல் இருக்கிறான் என்றெல்லாம் பொருள் சொல்லலாம். வெண்மை என்றால் இளமை என்றுகூட பொருள் இருக்கிறது.


ஆசிரியர்: அருமை, அருமை! ஆனால், நம் பேராசான் வெண்மை என்ற சொல்லுக்குப் புல்லறிவு என்று பொருள் சொல்கிறார். அஃதாவது, Mr White என்றால் திரு. புல்லறிவாளராம்!


திருக்குறளின் அடியொற்றித் தொடர்ந்த நாலடியாரிலும் அவ்வாறே!


பொன்னிறச் செந்நெற் பொதியொடு பீள்வாட

மின்னொளிர் வானங் கடலுள்ளுங் கான்றுகுக்கும்

வெண்மை யுடையார் விழுச்செல்வ மெய்தியக்கால்

வண்மை யுமன்ன தகைத்து.” --- பாடல் 269; நாலடியார்


நெற்கதிர்கள் வாட மழையானது கடலின் பரப்பில் பெய்து பயன் இல்லாமல் போய்விடும்; அதுபோல, வெண்மையுடையார் அஃதாவது புல்லறிவுடையார் ஒரு வேளை பெருஞ்செல்வம் பெற்றிருந்தாலும் அதுவும் அவ்வாறே பயனில்லாமல் போகும் தன்மைத்து.


வெண்மை என்றால் புல்லறிவு என்கிறார் இந்தப் பாடலை எழுதிய ஆசிரியர்.


ஒண்மை என்றால்? மதி நுட்பம்.


மீண்டும் நாலடியாரைப் பார்ப்போம்.

ஆற்றுந் துணையும மறிவினை யுள்ளடக்கி

ஊக்க முரையா ருணர்வுடையா – ரூக்க

முறுப்பினா லாராயு மொண்மை யுடையார்

குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு.” --- பாடல் 196; நாலடியார்.


மேற்கண்டப் பாடலை கீழ்கண்டவாறு பிரித்து எழுதிக் கொண்டால் பொருள் சற்று எளிதில் விளங்கும்.


“உணர்வுடையார் ஆற்றுந் துணையும் அறிவினை உள்ளடக்கி ஊக்கம் உரையார்;

ஊக்கம் உறுப்பினால் ஆராயும் ஒண்மையுடையார் குறிப்பின் கீழ்ப்பட்டது உலகு.”


பொருள்: அறிவுடையார் ஒரு செயலைச் செய்து முடிக்கும்வரை அதனைக் குறித்து யாதும் வெளிப்படுத்தமாட்டார். அது மட்டுமல்ல, பிறர் செய்யும் செயல்களை அவர்களின் புலன்களின் மூலமே ஆராய்ந்து என்ன செய்யப் போகிறார்கள் என்பதனையும் கணிக்கும் மதி நுட்பம் உள்ளவர்களின் கண்ணசைவின் கீழ் இந்த உலகம் செல்லும்.


இதற்கு, நாம் புரிந்துகொள்ளும் வகையில், ஏதாவது உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், கால்பந்து விளையாட்டை எடுத்துக் கொள்ளலாம். அதில் எப்படி எதிரணிக்கு எந்தக் குறிப்பையும் காட்டாமல் அதே சமயம் தங்களின் செயலை மறைத்து அடித்து ஆடுகிறார்களோ அதுபோல.


குறிப்பைப் பிடிப்போம். ஒண்மையுடையார் என்றால் நல்ல கூரிய மதியுடையார் என்று பொருள்.


வெண்மைக்கு எதிர்ச் சொல் ஒண்மை. புல்லறிவாளர்களுக்கு எதிர் கூரிய மதியுடையார்.


சரி, நாம் குறளுக்கு வருவோம்.


வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை

உடையம்யாம் என்னும் செருக்கு.” --- குறள் 844; அதிகாரம் – புல்லறிவாண்மை


வெண்மை எனப்படுவது யாது எனின் = புல்லறிவு எனப்படுவது எதுவென்றால்;

ஒண்மை உடையம் யாம் என்னும் செருக்கு = (ஒருவர்க்கு) எதுவுமே தெரியாமல் இருப்பினும் எனக்கு எல்லாம் தெரியும் என்னும் தற்பெருமை.


புல்லறிவு எனப்படுவது எதுவென்றால் ஒருவர்க்கு எதுவுமே தெரியாமல் இருப்பினும் எனக்கு எல்லாம் தெரியும் என்னும் தற்பெருமை.


இதுதான் குறிப்பு. எல்லாம் தெரியும் என்று நினைந்துவிட்டால் ... அவ்வளவுதான். நமக்கு உடனே பாடம் கற்பிக்கப்படுவதைப் பார்க்கலாம். எப்படி எனக்குத் தெரியும் என்று கேட்கிறீர்களா? அனுபவம் பேசத்தானே செய்யும்!


மீண்டும் சந்திப்போம். நன்றியுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
Comentários


Post: Blog2_Post
bottom of page