top of page
Search

வைத்தான்வாய் ... 1001, 18/05/2021

Writer: Mathivanan DakshinamoorthiMathivanan Dakshinamoorthi

18/05/2024 (1169)

அன்பிற்கினியவர்களுக்கு:

செல்வத்தைச் சேர்த்து வைத்திருக்கலாம் மூட்டை மூட்டையாக!

அதிலிருந்து கொஞ்சம் எடுத்துத் தமது தேவைக்கும், தாம் உண்ணவும் பயன்படுத்தினால் எங்கே அந்தச் செல்வத்திற்கு ஒரு குறை வந்துவிடுமோ என்று நினைப்பவரை நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று சொல்வீர்களா என்ன?

 

“எச்சைக் கையால் பிச்சைக்கூட ஓட்ட மாட்டார்” என்று கேள்வி பட்டிருப்போம். அதற்கு மேலும் சிலர் இருப்பர். தாமும் உண்ணாமல் பிறர்க்கும் உதவாமல்! அவர்களுக்குப் “புதையலைப் பூதம் காப்பதனைப் போல” என்று சொல்வார்களே அதைப்போல!

 

அவர்களைப் புதையலைக் காக்கும் பூதமென்றுதான் வைக்க வேண்டும்.  அஃதாவது, செத்தாருள் ஒரு பிரிவில்தான் வைக்க வேண்டும்.

 

நான் சொல்லவில்லை; நம் பேராசான் சொல்கிறார்.

 

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்

செத்தான் செயக்கிடந்த தில். – 1001; நன்றியில் செல்வம்

 

வாய் சான்ற பெரும் பொருள் வைத்தான் = அவனின் வாசல் கதவுகள் பிதுங்கி நிற்கும் அளவிற்குப் பொருள்களைச் சேமித்து வைத்திருப்பார்; அஃது உண்ணான் = எங்கே அந்தச் செல்வங்கள் குறைந்துவிடுமோ என்று அஞ்சி அதிலிருந்து ஒரு துளியினை எடுத்துத் தம் பசிக்கும் உணவாக்கிக் கொள்ளமாட்டார்; செத்தான் செயக் கிடந்தது இல் = அப்படிப்பட்டவர் வாழும்போதே இறந்தவர்தாம். அவர் இந்தப் பூவுலகிற்குத் தேவையும் இல்லை.

 

அவனின் வாசல் கதவுகள் பிதுங்கி நிற்கும் அளவிற்குப் பொருள்களைச் சேமித்து வைத்திருப்பார். எங்கே அந்தச் செல்வங்கள் குறைந்துவிடுமோ என்று அஞ்சி அதிலிருந்து ஒரு துளியினை எடுத்துத் தம் பசிக்கும் உணவாக்கிக் கொள்ளமாட்டார். அப்படிப்பட்டவர் வாழும்போதே இறந்தவர்தாம். அவர் இந்தப் பூவுலகிற்குத் தேவையும் இல்லை.

 

ஆந்திராவில் இறுதியில் இறந்துபோன அந்தப் பிச்சைக்காரர் போல! அவரை இந்த உலகம் இனம் கண்டுகொண்டது. இனம் புரியாமல் எத்தனையோ பேர் நம்முடன் உலவிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

 

செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்” – அதிவீரராம பாண்டியர்; வெற்றி வேற்கை என்னும் நறுந்தொகை

 

பொருளுடையவர்க்கு அழகாவது, நல்ல சுற்றத்தைப் பாதுகாத்தல்.

 

நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comentarios


©2021 by தினமும் திருக்குறள்.

bottom of page