top of page
Search

வினைக்கண் தேரான் தெளிவும் ... 519, 510

15/12/2022 (651)

செய்யும் செயல்களில் கருத்தூன்றி செய்து கொண்டிருப்பவர்களை நாம் சந்தேகப்பட்டால் என்ன ஆகும் என்ற கேள்வியோடு நிறுத்தியிருந்தோம்.


அந்தக் குறளைப் பார்ப்பதற்கு முன் ஒரு திரை இசைப் பாடல்:


“தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் ...

ஓரிடம் நிலையாக நில்லாத ரதம் போலே

உள்ளத்தை ஓடவிடும் - பின்னும்

சேரும் இடம் வந்து சேராத ஓடமாய்

திசை மாறச் செய்து விடும் ...

மனிதனை விலங்காக்கிடும் ...

ஊரார் சொல் பொய்யதனை ஊட்டிவிடும் - உண்மை

உரைப்பார் சொல் தப்பெனவே விலக்கிவிடும் ...” --- திரைப்படம் – தெய்வப்பிறவி (1960); உடுமலை நாராயணகவி அவர்களின் வரிகளில்; தமிழ் இசைச் சித்தர் C.S.ஜெயராமன் அவர்களின் மயக்கும் குரலில்.


(இந்தப் பாடலை இயற்றியவர் கவிஞர் தஞ்சை இராமையாதாஸ் என்று தவறாக குறிக்கிறார்கள்.)


சந்தேகம் என்பது மிகப் பெரிய பேய். அது பிடித்துவிட்டால் நம்மை நன்றாகவே ஆட்டி வைக்கும்.

இது நிற்க.


செய்யும் செயல்களில் கருத்தூன்றி செய்து கொண்டிருப்பவர்களை நாம் சந்தேகப்பட்டால் நம்மைவிட்டு செல்வம் நீங்கிவிடுமாம் - எச்சரிக்கிறார் நம் பேராசான்.


வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறுஆக

நினைப்பானை நீங்கும் திரு.” --- குறள் 519; அதிகாரம் – தெரிந்து வினையாடல்


வினைக்கண் வினையுடையான் கேண்மை = செய்யும் செயல்களில் கருமமே கண்ணாக இருப்பவர்களின் போக்கினை; வேறு ஆக = சந்தேகப் பார்வையோடு வேறு ஆக; நினைப்பானை நீங்கும் திரு = பார்ப்பவர்களைவிட்டு செல்வம் நீங்கும்.


அதாவது, அவர்கள் நம்மைவிட்டு நீங்கிவிடுவார்கள். விளைவு நமக்கு விளைச்சல் அவ்வளவுதான்!


இதனைத் தெரிந்து தெளிதல் அதிகாரத்தின் முடிவுரையாக ஏற்கனவே குறிப்பிட்டு இருக்கிறார். மீள்பார்வைக்காக காண்க 06/12/2022 (642).


தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பைத் தரும்.” --- குறள் 510; அதிகாரம் – தெரிந்து தெளிதல்


தேரான் தெளிவு = ஆராயமல் வைத்துக் கொண்டவனை நம்புவது; தெளிந்தான் கண் ஐயுறவு = நன்றாக ஆராய்ந்து தெளிந்தபின் அவன்மீது தேவையில்லாமல் சந்தேகப்படுவது; தீரா இடும்பைத் தரும் = முடிவில்லாத துன்பம் தரும்.


சந்தேகப் பேயை சந்தியிலேயே விட்டு விடுவோம்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.


உங்கள் அன்பு மதிவாணன்








8 views0 comments
Post: Blog2_Post
bottom of page