top of page
Search

வினைத்திட்பம் எண்ணிய ... 661, 666

28/04/2023 (785)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

பொருட்பாலில் உள்ள இரண்டாவது இயலான அங்கவியலில் உள்ள அதிகாரங்களையும், பாடல்களையும் பார்த்துக் கொண்டுவருகிறோம்.

அமைச்சு என்ற 64 ஆவது அதிகாரம் தொடங்கி, அமைச்சருக்குத் தேவையானவைகளைச் சொல்லாலேயே செய்து முடிக்கும் திறமையான சொல்வன்மை (65 ஆவது), எந்தச் செயலாக இருந்தாலும் அதில் தூய்மை இருக்க வேண்டும் என்பதற்காக வினைத்தூய்மை (66 ஆவது) அதிகாரம், அதைத் தொடர்ந்து வருவது, வினைத்திட்பம் (67 ஆவது) அதிகாரம். இந்த அதிகாரம் ஒரு மிக முக்கியமான அதிகாரம். திருக்குறளின் நடுவில் அமைந்திருக்கும் அதிகாரம். பல இரகசியங்கள் பொதிந்து இருக்கும் அதிகாரம்.


இந்த அதிகாரத்தின் நடுவில் உள்ள குறளின் வழியாகத்தான் இந்தத் தொடரே ஆரம்பித்தது என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.


நாம் நினைத்தது நினைத்ததுப் போல நிறைவேற ஒரு குறிப்பைக் காட்டியிருந்தார். காண்க 18/01/2021 (1). மீள்பார்வைக்காக:


எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்.” --- குறள் 666; அதிகாரம் – வினைத்திட்பம்


ஒரு செயலைச் செய்து முடிக்க வேண்டும் என்று உறுதி பூண்டு விட்டால், அந்த உறுதி இருக்கிறதே அது ஒரு மந்திரச் சாவி. அது அடைத்திருக்கும் வாசல்களைத் திறக்கும் அற்புதம் கொண்டது. நாம் செய்ய வேண்டியது எல்லாம் உறுதியுடன் முயலுவதுதான். இந்தக் கருத்து மிக முக்கியம் என்பதால் நம் பேராசான், பாதுகாப்பாக, திருக்குறளின் மத்தியில் பொதிந்து வைத்திருக்கிறார்.


வினைத்திட்பத்தின் வரையறையை (definition) முதல் பாடலிலேயே தெளிவாக்குகிறார். நாம் அந்தப் பாடலையும் முன்பு ஒரு முறை சிந்தித்துள்ளோம். காண்க 04/02/2021 (18). மீள்பார்வைக்காக:


“வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றவை எல்லாம் பிற” ---குறள் 661; அதிகாரம் – வினைத்திட்பம்

பொதுவாக, ஒரு செயலின் வெற்றிக்குத் தேவையானது: கருவிகளில் தேர்ச்சி (செயலைச் செய்ய), பாதுகாப்புகள் (தற்காத்துக்கொள்ள – Insurance மாதிரி), நட்பு (கை கொடுக்க). இவையெல்லாம் முக்கியம்தாம். ஆனால், அதைவிட முக்கியம் என்ன தெரியுங்களா? அதுதான் ‘மனத்திட்பம்’ – மனத்தில் உறுதி.

எண்ணிய எண்ணியாங்கு எய்த முதல் தேவை –‘ மனத்தில் உறுதி’ மீதியெல்லாம் அப்புறம்தாம். அதைத்தான் ‘மற்றவைஎல்லாம் பிற’ ன்னு சொல்கிறார் நம் பேராசான்.

நாளைத் தொடர்வோம்.

மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page