top of page
Search

வினையான் வினையாக்கி ... 678

14/05/2023 (801)

அன்பிற்கினியவர்களுக்கு வணக்கம்:

யானைகளைக் குறித்து முன்பு ஒரு முறைப் பார்த்துள்ளோம். காண்க 01/09/2022 (551). மீள்பார்வைக்காக:


களிறு என்றால் ஆண் யானை. பிடி என்றால் பெண் யானை. களிறுக்கு மத நீர் என்ற ஒன்று அதன் கன்னங்களில் சுரக்கும். மத நீருக்கு ஆங்கிலத்தில் musth என்று அழைப்பார்கள். இது பாலுனர்வைச் சார்ந்தது.

இது நிற்க.


கவுள் என்றால் கன்னம். நனை கவுள் என்றால் நனைந்த கன்னம்.

எதனுடைய கன்னம்? யானையின் கன்னம்.


களிற்றுக்கு மத நீர் சுரந்தால், அந்த மத நீரின் வாசனைக்குப் பெண் யானைகள் அதனை நோக்கி வருமாம்! அப்போது, அந்தப் பெண் யானைகளை சிறை பிடிப்பார்களாம்.


யாருப்பா அவர்கள்? என்று கேட்பது என் காதுகளில் விழுகிறது.

யானையைப் பிடிப்பவர்கள்!


வடையை வைத்து எலியைப் பிடிப்பது நமக்குத் தெரியும். யானையை வைத்தே யானையைப் பிடிப்பது ஆச்சரியாமாக இருக்கிறது.

அது சரி, கும்கி யானைகளை வைத்துதான் மதம் பிடித்த யானைகளை அடக்குகிறார்கள்.


ஆக மொத்தம், யானைக்கு யானையே குரு!


எதிராளியின் வினைகளை ஒடுக்க வேண்டும் என்றால் இரு வழிகள். ஒன்று: நேரடியாக மோதுவது. அதாவது, நேரடித் தாக்குதல்; இரண்டு: எதன் மூலமாவது செயலிழக்கச் செய்வது. இது மறைமுகத் தாக்குதல்.

நமக்குத் தேவை, அந்த எதிராளியின் வினை நம்மைத் தாக்கக் கூடாது. அவ்வளவே.


எலியாக இருந்தால் எலிப்பொறி.

யானையாக இருந்தால் யானைதான் சரி!


சரி, இந்தக் கதையெல்லாம் இப்போது எதற்கு?


நம் பேராசான் சொன்னக் கதைதான் இது!


என்ன சொல்கிறார் என்றால் பகைவனின் தாக்குதலை, நாம் செய்யும் ஒரு வினையால் மடக்கி விடுதல். அதாவது, மொக்கையாக ஆக்குதல்.

அதாவது, தற்கால அரசியலில், இதனைத் “தேன் தடவியப் பொறி” (honey trap) என்கிறார்கள். நம்ம பேராசான், இதை, “யானைப் பொறி” என்கிறார்.

நாம் குறளுக்கு வருவோம்.


வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்

யானையால் யானையாத் தற்று.” --- குறள் 678; அதிகாரம் – வினை செயல்வகை

கோடல் = வளைத்தல்; வினையால் வினை ஆக்கிக் கோடல் = நாம் ஒரு செயல் செய்வதன் மூலம், வெற்றியை உறுதி செய்யும் வகையில், எதிராளியின் செயலை வளைத்துவிடுவது, ஒடுக்கிவிடுவது; நனைகவுள் யானையால் யானை = மத நீர் சுரக்கும் யானையைக் கொண்டு பிரிதொரு யானையைக் கட்டிப் போடுவது போல.


நாம் ஒரு செயல் செய்வதன் மூலம், வெற்றியை உறுதி செய்யும் வகையில், எதிராளியின் செயலை வளைத்துவிடுவது, ஒடுக்கிவிடுவது, எதைப் போன்றது என்றால், மத நீர் சுரக்கும் யானையைக் கொண்டு பிரிதொரு யானையைக் கட்டிப் போடுவது போல.


இங்கே “வினை” என்பது மறைமுகச் செயல்.


சில எதிரிகளை நேர்முகமாக அழிப்பது கடினம். மறைமுகத் தாக்குதலால் எளிதாகக் காரியம் முடிந்துவிடும்.


மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




Comments


Post: Blog2_Post
bottom of page