top of page
Search

வாரியார் சுவாமிகள் கதை ... குறள் 109

03/12/2021 (283)

கெடுங்காலைக் கைவிடுபவர் எல்லாம் எப்படி நண்பன் என்று சொல்வது? என்ற கேள்வியை எனதருமை நண்பர் எழுப்பியிருந்தார். மேலும், கடைசி காலத்திலும் அதை மனதில் வைத்துக் கொண்டு புழுங்காம இருக்க என்ன செய்யனும் என்பது அவருடைய இரண்டாவது கேள்வி. இதற்கு நம் பேராசான் என்ன சொல்கிறார் என்பது மூன்றாவது கேள்வி.


என் ஆசிரியரிடம் இந்தக் கேள்விகளை வைத்தேன். அவரின் விளக்கம் வருமாறு:

‘கெடுங்காலை’ என துவங்கும் குறள் அமைந்திருப்பது பொருட்பாலில், அதுவும் தலைமையின் அங்கங்களை விளக்கும் அங்கவியலில், நட்பாராய்தல் எனும் அதிகாரத்தில் உள்ளது.


இங்கே: அந்த தலைவனுக்கு “நாம ஏமாந்து இருந்தாலும் பரவாயில்லை நம்மை நம்பியிருந்த மக்களையும் அல்லவா பாதித்துவிட்டது. நாம, அந்த நட்பினை சரியாக ஆராயாமல் விட்டு விட்டோமோ?” என்ற எண்ணம் அலைக்கழிப்பதை படம் பிடித்துக் காட்டுவதுபோல் உள்ளதாம். அது மட்டுமில்லாமல், எல்லாருக்கும், பொதுவாக, வள்ளுவப்பெருமான் சொல்ல வருவது என்னவென்றால்: நண்பர்களை கஷ்டகாலத்தில் கைவிடாதீங்க என்பதுதான்.


மேலும், ஒரு குறளை எப்போதும் கவனம் வைத்துக்கொண்டால் மனதுக்கு அமைதி கிடைக்கும் என்றும் சொன்னார். நாம முன்னாடியே பார்த்தக் குறள்தான் அது.


கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த ஒன்றுநன்று உள்ளக் கெடும்.” --- குறள் 109; அதிகாரம் -செய்ந்நன்றியறிதல்


நமக்கு ஒரு உதவி செய்தவர், காலத்தின் கட்டாயத்தினாலே நமக்கு ஒரு தீமை செய்தாலும், அந்த தீமை நம்மையே அழிப்பது போல துண்பத்தைத் தந்தாலும், அவர் முன் செய்த உதவியை மனதில் கொண்டால் நம்ம மனது அமைதியாயிடனுமாம். இதுவும் கடந்து போகும்னு விட்டுடனுமாம்ன்னு பார்த்தோம்.


அவன் ஒன்றுமே செய்யலையே, நான்தானே அவனுக்கு கொட்டி, கொட்டிக் கொடுத்தேன். ஏமாற்றிவிட்டானே, எதை நினைத்து அமைதியாவது என்று கேட்டால்:


வாரியார் சுவாமிகள் ஒரு கதை சொல்லுவார். மாட்டுக்கு நாம புல்லுக்கட்டை (அதாங்க அதன் உணவை) அதன் வாய்கிட்டதான் கொடுக்கிறோம். ஆனால், அது பாலை தன் மடியிலிருந்து கறக்கிறது. வாய் வழியாகத்தான் உதவி செய்தோம், அதனால் அதுவும் வாய் வழியாகவே பால் தர வேண்டும் என்று நினைப்பதில்லை.


நாம கொடுப்பது ஒரு இடம்; பெறுவது ஒரு இடம். நாம் எதுவும் செய்யாமலே நமக்கு பலர் உதவுவதை பெற்றுக்கொள்கிறோம். எல்லாவற்றிர்க்கும் ஒரு கணக்கு இருக்கு என்ற கதையையும் சொன்னார். கதையை மட்டும் சுருக்கிட்டேன். கருத்தைச் சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன்.


மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.




21 views1 comment
Post: Blog2_Post
bottom of page