14/03/2022 (381)
மாண்டார் – என்றால் நாம எப்படி பொருள் எடுக்கிறோம்?
நம்மாளு: மாண்டார்கள் என்றால் இறந்தார்கள். அதிலே என்ன சந்தேகம்? நேற்றைக்குகூட தினத்தந்தியிலே படிச்சேனே!
அதான் இல்லையாம். மாண்டார் என்ற சொல் ‘மாண்’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து வந்ததாம். ‘மாண்’ என்றால் மாட்சிமை, உயர்ந்த, பெருமை என்று பொருளாம். அதனாலேதான் ‘மாண்புமிகு’ன்னு அமைச்சர்களை அழைக்கிறோம்.
மாண், மாண்பு, மாணம், (‘மாணம்’ என்பது மருவி ‘மானம்’ ஆக மாறி இருக்கலாம்), மாண்டார் இப்படி இந்த சொற்கள் விரிகின்றன. அப்போ, மாண்டார் என்றால் மாட்சிமை உடையவர்கள் என்ற பொருளில்தான் அந்தக் காலத்தில் பழகி வந்துள்ளது.
என்ன சான்று?
“வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன் கண்
ஊறெய்தி உள்ளப்படும்.” --- குறள் 665; அதிகாரம் – வினைத்திட்பம்
எண்ணத்தால் சிறந்து பிற பல வகையாலும் உயர்ந்து விளங்கும் அமைச்சர்களின் செயல்திறன்; அரசனிடம் தனி மதிப்பைப் பெறுதலால் எல்லாராலும் நினைக்கப்படும், போற்றப்படும்.
வீறு = தனிச்சிறப்பு; மாண்டார் = மாட்சிமைப் பட்டார்; ஊறு எய்தல் = உறுதல், சென்று சேர்தல்
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் = எண்ணத்தால் சிறந்து பிற பல வகையாலும் உயர்ந்து விளங்கும் அமைச்சர்களின் செயல்திறன்;
வேந்தன் கண் ஊறெய்தி உள்ளப்படும் = அரசனிடம் தனி மதிப்பைப் பெறுதலால் எல்லாராலும் நினைக்கப்படும்.
மாணா = மாண் என்பதற்கு எதிர் (opposite). ‘மாணாமை’ என்றால் மாண் என்ற பண்பு அமையாமை, ஒரு நிலையில் நில்லாமை, மடமை
சரி, நாம நெஞ்சொடுபுலத்தலுக்கு வருவோம். ‘உன்னாலெ நான் கெட்டேன்’ ன்னு ‘அவள்’ புலம்புவது இது:
“நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மட நெஞ்சில் பட்டு.” --- குறள் 1297; அதிகாரம் – நெஞ்சோடுபுலத்தல்
அவரை மறக்க முடியாத என் மாட்சிமை இல்லாத மட நெஞ்சிடம் சேர்ந்து எனது நாணம் என்ற பண்பினையும் மறந்தேன்.
அவர்மறக்கல்லா என் மாணா மட நெஞ்சில் பட்டு = அவரை மறக்க முடியாத என் மாட்சிமை இல்லாத மட நெஞ்சிடம் சேர்ந்து; நாணும் மறந்தேன் = எனது நாணம் என்ற பண்பினையும் மறந்தேன்.
மீண்டும் சந்திப்போம், நன்றிகளுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
(வலைதளத்தில் தினமும் திருக்குறள்: www.easythirukkural.com)
Comments