வேல்அன்று வென்றி ... 546
01/01/2023 (668)
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
பல வெற்றிகளைக் குவித்த அரசர்கள் அல்லது தலைவர்கள் காலச் சக்கரத்தில் மறைந்து போகிறார்கள். மறக்கப்படுகிறார்கள்.
காலம் கடந்தும் வாழ வேண்டுமா? அதற்கு பதிலைத் தான் நம் பேராசான் இப்போது தெரிவிக்கப் போகிறார்.
அதற்குமுன், நாமும் சிந்திப்போம். காலம் கடந்தும் வாழும் தலைவர்களை நாம் சுலபமாக கண்டு கொள்ளலாம். சமுதாயத்திற்கு செய்த நல்லவைகளால்தான் அவர்கள் நினைவு கூறப்படுவார்கள்.
கரிகாலப் பேரரசன் கல்லணையால் காலம் கடந்தும் நிற்பார். அதே போன்று பல அரசர்களும் அவர்களின் உருவாக்கங்களால்தான் நினைவில் நிற்கிறார்கள். தஞ்சை பெரிய கோயில் கட்டுமானம் பலருக்கும் வியப்பைத் தருகிறது.
அரசர்கள், அவர்களுக்காக தனிப்பட்ட முறையில் அரண்மனைகளைக் கட்டிக் கொண்டார்களா என்பது தெரியவில்லை. அப்படி அவர்கள் செய்திருப்பின், அது காலத்தால் புறந்தள்ளப்பட்டது என்பது உண்மை.
பின் வரும் சமுதாயத்திற்கு, உதாரணமாகச் செய்த செயல்கள் காலம் கடந்து நிற்கின்றன; பயனும் தருகின்றன. அதனால்தான், இந்த செங்கோன்மை அதிகாரத்தில், பலவற்றைச் சாராக பிழிந்து சொல்லியிருக்கிறார் நம் பேராசான்.
“வேல் கொண்டு வீழ்த்தினான்”, “வேலைச் சுழற்றினால் சூறாவளி” போன்ற வீர தீரச் செயல்கள் மிக குறுகிய காலத்திற்குதான் நிற்கும்.
இந்தக் காலத்திற்கு ஏற்றார் போல் சொல்ல வேண்டும் என்றால், அடித்தோ, பிடித்தோ தனக்கு மட்டும் குவித்துக் கொள்வது குறுகிய காலத்திற்குத்தான் பயன்!
வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு!
அப்படியென்றால், ஒரு தலைமைக்கு எது முக்கியம்? நன்கு நிர்வாகத்தை நடத்துவது. அதுவும் எவ்வாறு?
அதற்குத்தான் மூன்று குறிப்புகளைத் தந்தார். வெளிப்படையான நிர்வாகம் (Governance), சமுதாய முன்னேற்றம் (Social), இயற்கையோடு இணைந்து செயல்படுதல் (Environmental friendly). இது தனி மனித வாழ்விற்கும் பொருந்தும்.
சரி நாம் குறளுக்கு வருவோம்.
“வேல்அன்று வென்றி தருவது மன்னவன்
கோல்அதூஉம் கோடாது எனின்.” --- குறள் 546; அதிகாரம் - செங்கோன்மை
வென்றி தருவது வேல்அன்று = என்றும் நிலைத்திருக்கும் வெற்றியைத் தருவது வீரம் அன்று; மன்னவன் கோல் அதூஉம் கோடாது எனின் = (பின் எது என்றால்) தலைமையின் சிறந்த நிர்வாகம், அதுவும் அழுத்தங்களுக்கு வளைந்து கொடுக்காத நிர்வாகம்.
என்றும் நிலைத்திருக்கும் வெற்றியைத் தருவது வீரம் அன்று; பின் எது என்றால், தலைமையின் சிறந்த நிர்வாகம், அதுவும் அழுத்தங்களுக்கு வளைந்து கொடுக்காத நிர்வாகம். அதனால் ஏற்படும் பயன்கள் காலம் கடந்தும் நிற்கும் என்கிறார்.
இந்த இனிய புத்தாண்டில் சிந்திக்க வேண்டிய ஒரு கருத்துதான் இது!
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன்
