விழைதகையான் வேண்டி ... குறள் 804
25/12/2021 (305)
எனக்கு பலத்த சந்தேகம். நட்பின் இலக்கணம் சொன்ன வள்ளுவப் பெருமான், அந்த நட்பையும் ஆராய்ந்து நட்பாக்க வேண்டும் என்றும் சொன்னார்.
ஆனால், பழைமை எனும் அதிகாரத்தில், ஏன் நட்பு தவறே செய்தாலும் பொறுக்க வேண்டும் என்கிறார் என்று எனக்கு சரியாக விளங்கவில்லை. அதுவும், பத்து குறள்களிலும் வெவ்வேறு வகையாக அழுத்திச் சொல்கிறார்.
நெற்றிக்கண்ணைக் காட்டிலும் குற்றம் குற்றமே என்று சொல்லத் தெரியாதவர்கள் நடுவு நிலைமை தவறியவர்கள் ஆக மாட்டார்களா? இந்த குழப்பம் எனக்கு வர ஆசிரியரை நாடினேன்.
ஆசிரியர்: ஒவ்வொரு செயலுக்கும் இரு வேறு பார்வைகள் இருக்கும், குறுகிய நோக்கில் தவறாகத் தெரிவது, நெடிய பார்வையில் சரியானதாக அமைந்துவிடும். ஒருவர் செய்த, செய்யும் செயல்கள் அந்த அந்த காலம், இடம் குறித்து அமையும். நண்பன் செய்த தவறு நாமும் செய்ய வாய்ப்பு இருக்கும்.
நண்பனின் எல்லாக் காரியங்களையும் ஆராய்ந்தால் மனதில் குழப்பம் ஏற்படும். அதனால், சந்தேகம் என்ற பேய் மனதில் குடியேறும். இதனைச் செய்யத்தான் நம் எதிரிகள் விரும்புவர். நமக்கு பல நியாங்களை எடுத்துச் சொல்லுவர் எதிரிகள்! இதற்கு இடம் கொடுத்தல் அவர்களின் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம். அது நமது மனதில் குடி கொண்டால் எல்லாவற்றிற்கும் அது மாறுபட்டே யோசிக்க வைக்கும். அமைதி குலையும். அமைதி குலைந்தால் நிதானம் தவறும். நிதானம் தவற நம்மைச் செய்யக்கூடாதனவற்றைச் செய்யத் தூண்டி நம்மை இறுதியில் அழிவுக்கு கொண்டுச் செல்லும்.
பல இனங்கள் அழிந்து போனதற்கு காரணமே சகோதரச் சந்தேகமே. அதனால்தான், நம் பேராசான் மாய்ந்து மாய்ந்து சொல்கிறார். ஆராய்ந்து நட்ட நட்பை தொலைத்து விடாதே.
ஈட்டல் கால் பங்கு என்றால் அதனைக் காத்தல் முக்கால் பங்கு.
இதையே, பழமொழி நானூறு என்ற நூலிலே “… ஒருவர் பொறை இருவர் நட்பு” என்கிறார் நூலாசிரியர்.
நாம குறளுக்கு வருவோம். உரிமையால் நம்மைக் கேளாமலே நம் நண்பர்கள் சில செயல்களைச் செய்வார்கள். அதனை அப்படியே விரும்பி ஏற்றுக் கொள்வது அறிவுடையார் செயல் என்கிறார்.
“விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையால்
கேளாது நட்டார் செயின்.” --- குறள் 804; அதிகாரம் – பழைமை
கெழுதகையால் கேளாது நட்டார் செயின்= உரிமையால் நம்மைக் கேளாமலே செய்யினும் அச் செயல்களை; விழைதகையான் வேண்டி இருப்பர் =நட்பு தொடர வேண்டும் என்று விரும்புபவர்கள் ஏற்றுக் கொள்வர்.
மீண்டும் சந்திப்போம். நன்றிகளுடன் உங்கள் அன்பு மதிவாணன்.
