அன்பிற்கினியவர்களுக்கு:
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா … கவிஞர் வாலி, பணம் படைத்தவன், 1965
பரமாத்மா சொல்கிறார்:
புலன்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. உறுதியாக இருப்பவனையும் அவை கலங்கச் செய்து அவனின் மனத்தையும் தம்முடன் இழுத்துக் கொண்டு செல்லும். – 2:60
எனவே மனம் எப்பொழுதும் யோகத்திலேயே (முயற்சியிலேயே) இருக்கட்டும். நான் இதுவரை சொன்ன கருத்துகளை உள்வாங்கி எப்பொழுதும் அதனையே மனத்தில் இருத்துபவன் எவனோ அவனுடைய புத்தி நிலைத்திருக்கும். – 2:61
நிலையற்றப் பொருள்களைச் சிந்திக்கச் சிந்திக்க அவற்றின்மீது பற்று உண்டாகும்; பற்று உண்டானால் அவற்றை அடைய வேண்டும் என்ற ஆசை மேலோங்குகிறது; அவ்வாசைகளுக்குத் தடை ஏற்படின் சினம் உண்டாகிறது. – 2:62
சினம் பேராசைக்கு வழி வகுக்கிறது; பேராசையால் தாம் உள்வாங்கிய நல்ல கருத்துகளெல்லாம் மறக்கடிக்கப்படுகிறது; அந்த தடுமாற்றத்தால் எடுத்துக்கொண்ட மன உறுதி குலைகிறது; மன உறுதி குலைவதால் ஒருவன் நாசமடைகிறான். – 2:63
நம்மாளு: பொருள்களின் மேல் கவனம்; தொடர்ந்து சிந்திப்பதனால் பற்று; பற்றினால் ஆசை என்னும் சிறிய நெருப்பு எழுகிறது; அந்த ஆசைக்குத் தடை வரும்போது பெரு நெருப்பாகச் சினம்; சினத்தினால் பேராசை; பேராசையால் தடுமாற்றம்; தடுமாற்றத்தால் நாசம் இதுதான் அழிவின் பாதை.
சொல்லும்போது நீண்டு கொண்டே போவது போல இருக்கும் இந்தப் பாதையில் பயணம் அனைத்தும் ஒரே நொடியில் நிகழ்ந்துவிடும்.
பல காலம் உறுதியோடு இருந்தவர்கள் ஒரு நொடியினில் தன் நினைவின்றித் தாழ்ந்துவிடுவர். பின்னர் வருந்துவதைத் தவிர வேறு வழியில்லை.
உடைந்த மண்பானையை ஒட்ட முடியாது. ஒட்டினாலும் அந்த வடுக்கள் மறையாது; மறையும்வரை பூச்சுகளைப் பூசினாலும் அது தன்மட்டில் உடைந்த பானையாகவே இருக்கும். ஆகையினால் புலன்களின் மீது கவனம் இருக்க வேண்டும்.
நவின யுகத்தில் கவனச் சிதறல்களுக்குப் பஞ்சம் இல்லை!
வள்ளுவப் பெருந்தகை என்ன சொல்கிறார் என்றால்
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு. – 343; - துறவு
அடல் = அழித்தல்
சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற நுகர்ச்சிகளை அழிக்க வேண்டும். அதற்கு ஏதுவாக, அந்த நுகர்ச்சிகளைப் பெறுவதற்கு நாம் உருவாக்கிய பொருள்களின் மேல் உள்ள பற்றுகளை எல்லாம் ஓர் ஒழுங்குடன் விடுதல் வேண்டும்.
தாயுமானவர் சுவாமிகள் என்ன சொல்கிறார் என்றால்:
சினமிறக்கக் கற்றாலுஞ் சித்தியெல்லாம் பெற்றாலும்
மனமிறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே. – பாடல் 169, பராபரக் கண்ணி, தாயுமானவச் சுவாமிகள்
மனம் அமைதி பெறுவதற்கு பெரும் முயற்சி தேவை.
இந்தக் கருத்தை எளிய வரிகளில் மகாகவி பாரதியார் எவ்வாறு பாடுகிறார் என்று நாளைப் பார்ப்போம்.
நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Comments