top of page
Search

01/11/2024, பகவத்கீதை, பகுதி 77

Updated: Nov 6

அன்பிற்கினியவர்களுக்கு:

எந்த உயிரின் செயல்களாலும் ஏற்படும் நன்மை தீமைகளுக்கு யாரும் பொறுப்பினை ஏற்க மாட்டார்கள். அவர் அவர்களே பொறுப்பு!

 

பரமாத்மா தொடர்கிறார்:

எவருடைய செயல்களால் ஏற்படும் நன்மை தீமைகளுக்கும் இறைவன் என்பவன் பொறுப்பு எடுப்பதில்லை; (இறைவன் பொறுப்பு எடுத்துக் கொள்வான் என்று) மயக்கமுற்று இருக்கிறார்கள். சரியான புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் பொருள். – 5:15

 

மயக்கமென்னும் திரை விலக ஞானமானது சூரியனைப் போல ஒளிரும்; இயற்கையின் (பரம்பொருள்) உண்மை விளங்கும். – 5:16

 

நம்மாளு: … புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்தப் புண்ணியம் கண்ணனுக்கே; போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே என்று சொல்லிக் கொண்டு உங்கள் விருப்பத்திற்கு ஏதேனும் செய்து கொண்டிருந்தால் நான் எப்படிப் பொறுப்பாக முடியும் என்கிறார். பொறுப்புத் துறப்பினை (Disclaimers) முதன் முதலில் கண்டுபிடித்தவர் பரமாத்மாதாம் போலும்!

 

ஒரு கதையைக் கேட்போம்:

 

ஒரு மின் விளக்கு ஒளிர்ந்து கொண்டு இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதன் மீது ஒரு மெல்லிய பல வண்ணத் துணி போர்த்தப்படுகிறது; அந்த ஒளியின் வீச்சுத் தடைபடுகிறது, குறைகிறது. மேலும் ஒரு வெண்மைத் துணி போர்த்தப்படுகிறது. வெண்மைதான்! இருப்பினும் ஒளியின் வீச்சு என்னமோ குறைகிறது; மேலும் அதன் மீது பொன் வண்ணத்துணி ஒன்று போர்த்தப் படுகிறது; பொன் வண்ணம் மிளிர்கிறது; இருப்பினும் அந்த விளக்கின் ஒளி மேலும் குறைகிறது.

அந்தத் துணியின்மீது சிவப்புத் துணி விழுகிறது, மேலும் ஒளி குறைகிறது; இப்படிப் பச்சை, நிலம் என்று துணிகள் விழுந்தபின் கறுப்புத் துணியும் விழுந்து இப்பொழுது ஒளி இருந்த இடமே தெரியவில்லை. கும்மிருட்டு சூழ்கிறது.

 

ஆனால், அந்த விளக்குத் தன்மட்டில் உள்ளிக்குள்ளே ஒளிர்ந்து கொண்டுதான் உள்ளது. அதன் வீச்சுதான் வெளிப்படவில்லை!

 

அந்தத் துணிகள் ஒவ்வொன்றாக விலகினால் அந்த விளக்கின் ஒளி மீண்டும் முன் போன்றே தகதகாயமாக ஒளிரும்.

 

நம்மாளு: இது என்ன கதை? இந்தக் கதை எதற்கு?

 

ஆசிரியர்: வடலூர் வள்ளல் பெருமான் நமக்கெல்லாம் விட்டுச் சென்ற குறிப்புதான் அந்தக் கதை!

 

ஏழு குணங்களால் மனிதன் சிக்கிக் கொள்கிறான். அவையாவன: காமம், குரோதம், லோபம், மதம், மார்ச்சரியத்தால் (பொறாமை) தோன்றும் பொய், களவு, சூது என்னும் ஏழுமாம்.

 

இந்த ஏழினைக் குறிக்க ஏழு திரைகள், ஏழு வண்ணங்கள் என்றார். இந்த ஏழும் நீங்க, உள்ளிருக்கும் ஆன்ம ஒளி வெளிப்படும் என்கிறார். இந்தக் குறியீட்டினைத்தான் தைப் பூசச் சோதி தரிசனம் என்னும் வகையில் ஏழு திரைகளை நீக்கிச் சோதியைக் காண்பிக்கிறார்கள்! அதற்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு நடையைக் கட்டுகிறோம் நாம்.

 

வெளியே இருந்தும் திரைகளை நீக்கலாம், உள்ளிருந்தும் திரைகளை உதறலாம்!

 

ஆக பாடல் 5:16 இல் பரமாத்மா சொல்வதும் திரைகள் விலக இயற்கை ஒளிரும் என்பதனைத்தான்.

 

இதற்கும் மேல் ஒரு திரை உண்டென்று வள்ளல் பெருமான் சொல்லிச் சென்றுள்ளாராம். அது ஞானம் என்னும் திரை. இந்தத் திரையையும் விலக்கிட வேண்டும் என்கிறார். இஃது முற்றும் நீத்தார்களுக்கானது என்றே நினைக்கிறேன்.

 

பரமாத்மா தொடர்கிறார்:

 

இவ்வாறு இயற்கையில் ஒன்றிப் பற்றுகளை உதறித் தள்ளுபவர்கள் அமைதியை எய்துகிறார்கள். பிறவாமை என்னும் பெரும் பேற்றை எய்துகிறார்கள். – 5:17

 

வள்ளுவர் பெருந்தகை என்ன சொல்கிறார் என்றால்:

 

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும். - 362; - அவா அறுத்தல்


நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




9 views0 comments

Comentarios


Post: Blog2_Post
bottom of page