top of page
Search

02/11/2024, பகவத்கீதை, பகுதி 78

Updated: Nov 6

அன்பிற்கினியவர்களுக்கு:

கல்வியும், பணிவும் மிகுந்து இயற்கையை அறிந்தவனும், பசு, யானை, நாய் உள்ளிட்ட மிருகங்களும், அந்த மிருகங்களைப் புசித்து உண்பவர்கள் யாராக இருப்பினும் இவர்கள் எல்லாரும் இறையின் உருவங்களே என்னும் சமபார்வையினை உள்ளவன் தான் உண்மையான ஞானமுடையவன். – 5:18

 

எல்லாம் உன்னுள்ளே உள்ளது; நீயே எல்லாவற்றிலும் உள்ளாய் என்று சொல்கிறார். நீ ஒரு தனித்தீவு அல்ல என்பது இதன் கருத்து.

 

மகாகவி பாரதியார் “கடவுள் எங்கே?” என்று ஒரு நீண்ட பாடலை எழுதியுள்ளார். அதில் இந்தக் கருத்தினைப் பதிவு செய்துள்ளார்.

 

சொல்லடா! ஹரியென்ற கடவுள் எங்கே?

“சொல்” லென்று ஹிரணியன் தான் உறுமிக் கேட்க,

நல்லதொரு மகன் சொல்வான்;- தூணிலுள்ளான்

நாராயணன் துரும்பிலுள்ளான்” என்றான்.

 

வல்ல பெருங்கடவுளிலா அணு ஒன்றில்லை,

மஹாசக்தியில்லாத வஸ்துவில்லை,

அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை;

அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ?

 

கேளப்பா,சீடனே! கழுதை யொன்றைக்

“கீழான” பன்றியினைத் தேளைக் கண்டு

தாளைப்பார்த்து திருகரமுஞ் சிரமேற் கூப்பிச்

சங்கர சங்கரவென்று பணிதல் வேண்டும்;

 

கூளத்தை மலத்தினையும் வணங்கல் வேண்டும்;

கூடிநின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.

மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்;

விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே.

 

சுத்தஅறிவே சிவமென்றுரைத்தார் மேலோர்

சுத்தமண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;

வித்தகனாம் குரு சிவமென்றுரைத்தார் மேலோர்,

வித்தையிலாப் புலையனும் அஃதென்னும் வேதம்;

 

பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று

பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும்

நித்தம் நுமதருகினிலே குழந்தை யென்றும்

நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழ்த்துவீரே?

 

உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை;

ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;

பயிலுமுயிர் வகைமட்டு மன்றி யிங்குப்

பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;

 

வெயிலளிக்கும் இரவி, மதி,விண்மீன்,மேகம்

மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே

இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;

எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம். --- மகாகவி பாரதியார்

 

இப்படி விரித்துக் காட்டியுள்ளார்! சமநோக்கு உடையவன் அறிவுடையோன். அவ்வளவே!

 

பரமாத்மா தொடர்கிறார்:

 

எவர்களுடைய மனது சமனிலையில் நிறுத்தப்பட்டதோ அவர்களால் இங்கேயே அவர்களின் பிறப்பு உச்சம் காண்கிறது. இயற்கை அனைவர்க்கும் சமமானது; தம்மட்டில் குற்றமற்றது. எனவே மனத்தினில் சமனிலை எய்தியவர்கள் இயற்கையோடே இயல்பாக ஒன்றி விடுகிறார்கள். – 5:19

 

நாளைச் சந்திப்போம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.




4 views0 comments

Comments


Post: Blog2_Post
bottom of page