அன்பிற்கினியவர்களுக்கு:
சம நோக்கு உடையவன் மன அமைதி பெற்றுப் பிறப்பின் உச்சம் காண்கிறான் என்றார் பாடல் 5:19 இல்.
பாடல் 2:57 இல் (பார்த்தா) நல்லவை நிகழும்போது மிகவும் மகிழாமலும் அல்லவை நிகழும்போது வருந்தாமலும் இருப்பவன் எவனோ அவனின் மனம் ஒரு நிலையில் இருக்கும் என்றார்.
இந்தக் கருத்தையே பாடல் 5:20 இலும் வலியுறுத்துகிறார்.
இயற்கையின் இயல்பை அறிந்தோன் விருப்பப்பட்டதை அடையும்போது களி கொள்ளாமலும், விரும்பதாகது நிகழும்போது வருந்தாமலும் ஒரு நிலையான புத்தியில் நிலைப்பான். – 5:20
மன அமைதியுடன் உள்ளுக்குள், அஃதாவது, அகத்துள் சமநிலையில் இருப்போன் அழியாத இன்பம் எய்துகிறான். புறக்காரணிகளால் மகிழ்ச்சி அடைவோன் அக்காரணிகள் நீங்க அவனின் மகிழ்ச்சியும் மறையும். புறக்காரணிகள் தோன்றி மறையும் தன்மை உடையன. அறிவுடையவன் அவற்றின்மீது நாட்டம் செலுத்துவதில்லை. – 5:21-22
இந்த உடல் அழியும் முன்னரே காமம் குரோதம் உள்ளிட்டவற்றின் தாக்கத்தை, அவற்றின் வீச்சைத் தாங்கிக் கொண்டு கடக்கக் கற்றுக் கொண்டவனே யோகி. அவனே உண்மையான இன்பத்தைப் பெறுபவன். – 5:23
நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அத்தியாயம் சந்நியாச யோகம். எனவே, பற்றில்லாமல் சமநிலையில் இருப்பதுதான் முக்கியம் என்பதனால் அந்தக் கருத்தினைப் பல் வேறு வகையினில் மீண்டும் மீண்டும் தெளிவு படுத்துகிறார். சந்நியாசம் என்பது பற்றுகளைத் துறந்து செயல்களைச் செய்வது என்பது நமக்குத் தெரியும். இஃது இல்லறத்தார்க்கு உரியது என்பதும் நமக்குத் தெரியும். இந்தக் கருத்துகளைக் கலங்கி நிற்கும் அர்ஜுனனுக்குச் சொல்வது போல கலங்கி நிற்கும் நம் அனைவர்க்குமே சொல்லிக் கொண்டு வருகிறார்.
மகிழ்ச்சி என்பதே மனநிலைதான் (Perception). விமான நிலையத்திற்குள் சென்று விமானத்தில் அமர இருக்கையை உறுதிசெய்யும் அனுமதிச்சீட்டு (Boarding pass) பெற்றுக் காத்திருக்கும் அரங்கத்தில் அமர்ந்திருக்கிறோம். இன்னும் சில மணித்துளிகளில் ஏறி உட்கார வேண்டியதுதான் பாக்கி. இந்த இன்பச் சுற்றுலாவினை நீண்ட காலமாகத் திட்டமிட்டுச் செய்துள்ளோம். உள்ளத்தில் மட்டில்லா மகிழ்ச்சி!
அந்த நேரத்தில் ஒரு அறிவிப்பு. புறப்பட வேண்டிய விமானம் தவிர்க்க இயலாத தொழில் நுட்பக் காரணங்களினால் கால வரையின்றித் தள்ளி வைக்கப்படுகின்றது என்கிறார்கள்.
நம் மன நிலை என்னவாக இருக்கும்? அந்த மகிழ்ச்சி மறையும். தவிப்பு தலைத் தூக்கும். கோபம் வரும். அங்கே நிற்கும் ஊழியர்களிடம் பலர் வாக்குவாதங்களிலும் ஈடுபடுவார்கள்!
ஆனால், நாம் முக்கியமாகக் கவனிக்கத் தவறுவது என்னவென்றால்
நல்ல வேளையாக அந்தக் கோளாறுகளை விமானம் பறக்கும் முன்பே கவனித்தார்களே என்பதுதான்! அதற்காக நாம் அமைதியாகாமல் கோபம் தலைக்கேறுகிறது!
ஆகவே, மகிழ்ச்சி என்பது மன நிலைதான் (Perception)! மனத்தை அமைதியாக வைத்துக் கொண்டால் அனைத்தையும் அழகாகக் கடக்கலாம். சுகமாக இருக்கலாம். பாடல் 5:23 இல் குறிப்பிடப்படுவதும் இஃதே.
ஆர்ப்பரிக்கும் அலை கடலின் ஆழத்தில் அமைதியே என்றும் நிலவுவதுபோல இருத்தல் வேண்டும்.
மேலும் தொடர்கிறார்:
தனக்குள்ளேயே ஆனந்தத்தையும், மகிழ்ச்சியையும், காண்பவன் எவனோ, தமக்குள் இருக்கும் அந்த ஆத்ம ஒளியைக் காண்பவன் எவனோ அவன் இயற்கையோடு இணைகிறான். இயற்கையாகவே மாறுகிறான். நிர்வாணம் என்பதும் இஃதே. – 5:24
நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்.
Commenti