top of page
Search

04/09/2024, பகவத்கீதை, பகுதி 20

அன்பிற்கினியவர்களுக்கு:

தமிழ் இலக்கணத்தில் “சாதி ஒருமை” என்னும் ஒன்று இருக்கிறது. எடுத்துக்காட்டாக “மாம்பழம் இனிக்கும்” என்றால் அந்த மாம்பழம் மட்டும் இனிக்கும் என்று பொருள் அல்ல. அனைத்து மாம்பழங்களும் இனிக்கும் என்று பொருள்.  இங்கே மாம்பழம் என்பது சாதி ஒருமை. அஃதாவது, அந்தப் பொருள்களிடையே ஓர் ஒப்புமை இருக்கிறது.


காஞ்சிபுரம் பட்டுச் சேலை என்றால் சிறப்பு என்கிறார்கள். அஃது ஏன் என்றால், காஞ்சியில் இருக்கும் ஏதோ ஒன்று அங்கு நெய்யப்படும் சேலைகளுக்குத் தனித்துவத்தை அளிக்கின்றது. இஃது ஒருவகை சாதி ஒருமை. தற்காலத்தில் இதனைப் புவிசார் குறியீடு (Geographical indication) என்கிறார்கள்.


“நல்லாண் பிள்ளை பெற்றாள்” என்றால் என்னவோ ஏதோ என்று நினைக்காதீர்கள். இஃது ஓர் ஊர்.  விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டத்தைச் சேர்ந்த சிற்றூர் ஆகும். செஞ்சியில் இருந்து 23 கி.மீ தொலைவிலும் கடலாடி குளத்தில் இருந்து மேற்கே 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊரின் சிறப்பு என்னவென்றால் பெரும்பாலான இல்லங்களில் ஒருவராவது ஆசிரியப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வார்களாம். விழுப்புரம் மாவட்டத்திலேயே அதிக ஆசிரியர்களைக் கொண்ட ஊர் எனப் பெயர் பெற்றது இந்த ஊர். இதுவும் ஒரு சாதி ஒருமைதான்!


வர்ணங்கள் சாதிகள் ஆனது எப்பொழுது என்பது தெரியவில்லை! ஆனால் கீதையில் சாதிகள் குறித்த குறிப்புகள் இதுவரை என் கண்ணிற்கு ஏதும் படவில்லை.


சிறு குழந்தைக்கு ஒழுக்கத்தை ஊட்ட வந்த ஒளவைப் பிராட்டியார்  இரண்டு சாதிகளைச் சொல்கிறார்.


சாதி இரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்,

பட்டாங்கில் உள்ள படி. … பாடல் 2, நல்வழி

 

இரண்டே இரண்டு சாதிகள்தாம் பிறர்க்கு உதவினால் பெரியோர் என்னும் சாதியில் சேர்வர்; இல்லையென்றால் இழிகுலத்தோர் ஆவர் என்கிறார்.

 

இந்தச் சாதி தர்மங்களும்கூட போரினால் கெடும்.

 

வகுக்கப்பட்ட வழியில் செல்ல வெண்டும் என நினைப்பவர்களையும் நிலை தடுமாற வைக்கும் போரின் எச்சங்கள்.

 

போரில் 17 ஆம் நாள்வரை போர்த் தர்மத்தைக் கடைபிடித்த துரியோதனன் 18 ஆம் நாள் அதைக் கைவிட்டு குறுக்குவழியில், அஃதாவது, மந்திர தந்திரங்களால் பாண்டவர்களைத் தோற்கடிக்க முயல்கிறான்.

 

யாருக்கும் தெரியாமல் அவன் முன்னர் கற்று அறிந்த அந்த மந்திரத்தை நீர்நிலைக்கு ஆழத்தில் இருந்து கொண்டு திரும்பச் திரும்பச் சொன்னால் இறந்தவர்களை எழுப்பலாம். அதைச் செய்தாவது வெற்றி பெறலாமா என்று தன் நிலையில் இருந்து தடுமாறுகிறான்.

 

குளத்தில் இறங்கி அவன் சாதகத்தைச் செய்ய முயல்கிறான். அவன் பாதை மாறுவது பரமாத்வாவிற்கு ஏற்புடையதாக இல்லை போலும். அவனை வலுக்கட்டாயமாக வெளியே வர வைத்து அவனை பீமனுடன் சமர் செய்ய வைத்து அந்தச் சண்டையிலும் பீமன் வெற்றியடையமாட்டான் என்ற நிலை வருகிறது. அதன் மூலம் அவனின் போர்த்திறம் வெளிப்பட வைக்கிறார்.

 

பின் பீமனுக்கு ஒரு குயுக்தியைச் சொல்லி பாண்டவர் வெற்றி பெற வழி திறக்கிறார். வெற்றியா அது? சிந்திக்க வைப்பது. இதுதான் ஆசிரியர் வியாச பகவான் நமக்கெல்லாம் தரும் குறிப்பு.

 

அந்தப் போரின் முடிவில் வானுலகத்தார் துரியோதனன் மீது மலர் மாரி பொழிகின்றனர். மகாபாரதப் போரில் வீர மரணம் எய்திய யாருக்கும் மேலோர் பூமாரி பொழிந்ததில்லை.

 

நல்ல நூல்கள் தம்மட்டில் இருக்கும்; நிலைக்கும். அவற்றைக் கொண்டு உள்பொருளையும், மறை பொருளையும் எந்தவிதக் கண்ணாடியையும் அணிந்து கொள்ளாமல் ஆராய்ந்து தெளிவது நலம்.

 

இக்காலத்தைய பொருளைக் கொண்டு அக்காலச் சொல்களை ஆராய்வது கேள்விக்குரியது.


நாளைத் தொடர்வோம். நன்றியுடன், உங்கள் அன்பு மதிவாணன்




5 views1 comment

1 Comment


"எந்தவிதக் கண்ணாடியையும் அணிந்து கொள்ளாமல் ஆராய்ந்து தெளிவது நலம்.

 இக்காலத்தைய பொருளைக் கொண்டு அக்காலச் சொல்களை ஆராய்வது கேள்விக்குரியது." Absolutely true. துரியோதனன் 18 ஆம் நாள் அதைக் கைவிட்டு குறுக்குவழியில், I wonder whether Krishna followed that .. For instance how he handled Karnan...reminded of the saying "Every thing is fair in Love and War." Interestingly certain things what we feel as Controversy in Mahabharatham is being followed by certain section of the society even today . I had seen these among certain tribes in Nilgiris in 1970s. As you said there are SWOTS for each region too. For instance Skills in dealing with Diamonds Surat..Investment casting in and around Kumbakonam Matches and related crackers (paper printing ) around Sivakasi etc...in a lighter vein Halwa in Tirunelveli..

Like
Post: Blog2_Post
bottom of page